அப்போ நான் எட்டாங்கிளாஸ். புது ஸ்கூலில் சேர்த்திருந்தார்கள். இரண்டு மணிக்கே ஸ்கூல் முடிந்து விடுவதால் சும்மா ஜாலியாக தூங்கிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்த என்னைப் போய் பக்கத்தில் உள்ள ஒரு டென்னிஸ் கிளாஸில் என் பெற்றோர் சேர்த்திருந்தார்கள். நடுத்தர குடும்பமான எங்களுக்கு டென்னீஸெல்லாம் கொஞ்சம் அதிகப்படி தான். என் cousin மாவட்ட அளவு கால்பந்து வீரன். அதனால் ஒரு கெத்துக்காக நானும் வேண்டா வெருப்பாக போய் வந்தேன்.
டென்னிஸ் கோச் மைதானத்தைச் சுற்றி பத்திருவது தடவை ஓட வைப்பார். தினமும் 10 நிமிடம் டென்னிஸும் 40 நிமிடம் ஓட்டமும்! என்னாடாப்பா இது, டென்னிஸ் கோச்சிங்கா இல்ல ஓட்டப்பந்தயத்துக்குக் கோச்சிங்கான்னு புறியாமல் செம கடுப்பில் ஓடிக்கொண்டு இருந்தேன்.
அப்பொழுது பெயர் தெரியாத சொகுசு காரில் டென்னிஸ் மட்டை உயரமே இருந்த ஒரு சிறுவன் வந்திறங்கினான். இன்னும் தூக்கம் கலையாத முகத்துடன் மட்டையயும் தண்ணி பாட்டிலயும் தரதரவென இழுத்துக் கொண்டு வந்தான். அவன் வரும் விதத்தைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்து அதை கோச்சாரும் பார்த்துத் தொலைக்கவே எனக்கு அன்று நல்ல பந்துகளில் இருந்து குழி விழுந்த மொக்கை பந்துகளை பிரிக்கும் வேளை கொடுக்கப்பட்டது.
பிறகு அவன் ஃபோர்த்து கிரேடில் மாற்று-முறைக் கல்விக்குப் பெயர் போன உயர்ரகப் பள்ளியில் படிக்கிறான் என்றும் டென்னிஸ் கிளாஸில் அவன் தான் ஆகப்பெரிய ஜோக்கர்க்கோமாளி என்றும் அறிந்து கொண்டேன்.
சீருடை அணிந்த காரின் ஓட்டுனர் உலுக்குஉலுக்கு என்று உலுக்கின பிறகுதான் துயில் எழுவான். அதன் பின் அரைத் தூக்கத்தில்லேயே warm-up செய்து அரைத் தூக்கத்தில்லேயே jogging முடித்து அ.தூக்கத்தில்லேயே forehand/backhand பயிற்சி முடித்து அ.தூக்கத்தில்லேயே volleyயும் முடித்து அ.தூக்கத்தில்லேயே கோச் கொடுக்கும் தண்டனையையும் நிறைவேற்றி விட்டுக் கிளம்புவான்.
ஒருநாளும் அவன் யாருடனும் பேசிப் பார்த்ததில்லை.
நான் அன்று பயிற்சி முடித்து கிளம்பத் தயாராக இருந்தேன். பயிற்சி முடித்ததும் அடுத்த வினாடியே இன்னும் கொஞ்சநேரம் ஓடகீட கோச் சொல்லிவிடுவாரோ என்று பயத்தில் ஒழுங்காக கிளம்பி விடும் நான் அன்று என் போதாத நேரத்தால் நெட் அருகே நின்று கொண்டு மற்றவர்கள் பயிற்சி செய்வதை பராக்குப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அரைத்தூக்கவாசி தான் விளையாடிக் கொண்டு இருந்தான். Marker போடும் ஒவ்வோரு பந்தையும் விளாசிக் கொண்டு இருந்தான். அவை அனைத்தும் பக்கத்துக் கோர்ட்டிலேயே விழுந்துக் கொண்டு இருந்தது. கடுப்பாகிக் போன Marker இன்னும் வேகவேகமாக அடுத்தடுத்து பந்துகளை வீசினார். அவனும் சளராமல் பந்தை பக்கத்து கோர்ட்டுக்கே அனுப்பிக் கொண்டு இருந்தான். இந்த அலகிலா விளையாட்டை நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
திடீரென அவனது டென்னிஸ் மட்டை கைத்தவறி பறத்து அந்த வேகத்தில் சுழன்று சரியாக என் மீது விழுந்தது. அடி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. ஆனால் இந்த தீடீர்த் தாக்குதலால் நிலை குலைந்த நான் தரையில் கிடந்தேன். பிறகு எம்பி நின்று சட்டையை உதறி நின்றபோது கோச் செமத்தியாக அ.தூவை வைதுக் கொண்டு இருந்தார். இஷ்டமில்லைனா வராதே... .. பாரு உன்னால் ஒருத்தனுக்கு அடி...வந்து எதுக்கு இப்படி எல்லார்க்கும் இம்சை கொடுக்குற.. என்று சொல்லிக்கொண்டே போனார். கோச்சிடம் அடியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லலாம் என்று நினைத்து ... இதை வைத்தே நாளை மட்டம் போடலாமே என்ற திடீர் ஞானோதயம் ஏற்பட நான் பேசாமல் இருந்தேன். அ.தூவை 10 ரவுண்ட் வெளி மைதானத்தில் ஓட கட்டளையிட்டார். வழக்கம் போல் அவன் எந்த பதிலும் பேசவில்லை.
சட்டென்று கோச்சார் என்னை கூப்பிட்டார். அடி கிடி பட்டிருந்தா நாளைக்கு ஒண்ணும் வரவேணாம்முன்னு சொல்லப் போறார் என்று எதிர்பார்த்துக்கொண்டே போனேன். அதான் போன பத்தியிலேயே போதாத காலம் என்று சொன்னேனே.. அப்படி சொல்லிவிட்டு எப்படி நான் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு போகலாம்? உன்னை எவன்டா Net கிட்ட நிக்க சொன்னான்...அதான் சிமெண்ட் பெஞ்சு இருக்குள்ள.. அங்க உக்காந்து பாக்குரதுக்கு உனக்கு என்ன வலிக்குதா என்று என்னையும் போட்டு வறுத்தெடுத்தார். விட்டால் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு ஓட வேண்டும் போல் இருந்த என்னையும் அரைத்தூக்கவாசியோடு ஓட கட்டளையிட்டார்.
வெளி மைதானத்தைச் சுற்றி 10 ரவுண்டுகள். எனக்கு அப்படியே பொங்கிக் கொண்டு வந்த துக்கம் தொண்டயை அடைத்தது. அடி பட்டு விழுந்து கிடந்தவனிடம் கொஞ்சம் கூட கரிசனமாக பேசாமல் இப்படி ரவுண்டடிக்க விடுகிறார்களே என்று எண்ணி எண்ணி ஆத்திரமும் அழுகையும் மற்ற என்ன என்னவோ உணர்ச்சிகளும் வந்து கொண்டே இருந்தன. டேய் நான் உன்ன ஓடசொன்னனே..ஓடாம எண்ண பேன்னு நின்னிட்டு இருக்கே என்று கோச்சார் கத்த வந்த உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்தி வெளி மைதானத்தில் ஓடத் தொடங்கினேன்.
எனக்கு இந்த கதியை ஏற்படுத்திய எதிரி தூரத்தில் ஓடிக்கொண்டு இருந்தது. மூச்சைப் பிடித்து ஒடி வந்து அதன் பின் பக்கத்தில் ஒரு உதையையும் தலையில் ஒரு குட்டும் கொடுத்தேன். தூக்கத்திலிருந்து விழித்து என்னை பார்த்து சாரி என்றது. காலுடைந்த ஆடு ஒன்று ஓடுவதைப் போலவே இருந்தது அவன் ஓட்டம்.
மைதானத்தின் மறு ஓரத்தில் இருந்தோம். நான் அவனை பிடித்து இழுத்து நிறுத்தினேன். இந்த இடத்தில் நாம் இருப்பது கோச்சுக்குத் அங்கிருந்து தெரியாது. அதனால் இங்கு நாம் நடப்போம். மறு கோடியில் திரும்பவும் ஓடுவோம் என்று என் எட்டாங் கிளாஸ் குறுக்குபுத்தியை ஃபோர்த் கிரேடுக்கு புகட்ட முயன்றேன்.
அவன் ஒரு கம்பிளிப்பூச்சிப் போல் வளைந்து வளைந்து நடத்து கொண்டிருந்தான். டேய் கோணக்காலா.. ஒழுங்கா நடக்க தெரியாதா உனக்கு என்று சீண்டியபடியே இருந்தேன்.திடீரென ஒரு இடத்தில் அவன் நின்றான். கீழே குனிந்து புல்லில் இருந்த என்னத்தயோ எடுத்தான். எதோ ஒரு சின்ன அழுக்கு காலி பாக்கெட். மிகச் சின்னதாக Pizzaவுடன் வரும் Chilly Flakes பாக்கெட் போல இருந்தது. அதன் மேல் இருந்த எழுத்துக்கள் அழிந்திருந்தன. ஒரு முழு நிமிடம் அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'டேய்..அத கீழப்போடுடா..அழுக்கு..‘ என்றேன்.
'இது என்னவென்று தெரியுமா' என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவன் பேசி நான் கேட்கும் முதன் வாக்கியம்.
'ஏதோ பாக்கெட்டா...நீ அதை கீழ போடு..நேரம் ஆது.. கோச் பாத்தா அவ்ளோதான்‘
'இது Grass' என்றான்.
'ஆங்...என்னாது?'
‘Grass'
'டெய்...நீ கோணக்காலு தூங்குமூஞ்சின்னு தான் நினைச்சேன்.. நீ லூசு கூடவா..பாக்கெட்ட போய் Grassனு சொல்ற... புல்லுல்ல இருந்து எடுத்தா அதுவும் புல்லா?..அது செரி...மவனே இன்னும் ஒம்போது ரவுண்ட் போனும்... உன் ஸ்கூல்ல எக்ஸாம் கிக்ஸாம்லாம் கிடையாது.. எனக்கு நாளைக்கு பிஸிக்ஸ் டெஸ்ட்டு....” என்று அவனை திட்டி விட்டு ஓடத்தொடங்கினேன்.
அடுத்த நாள் கால் வலி என்று பிஸிக்ஸ் டெஸ்ட்டுக்கும் அப்படியே டென்னிஸ் கிளாசுக்கும் மட்டம் போட்டேன். படிப்பு தான் முக்கியம் என்றும் டென்னிஸுக்கெல்லாம் போய் படிப்பைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்றும் இனிமேல் டென்னிஸ் கின்னிஸெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் என்றும் அப்பா சொன்னார். நானும் கண்ணீர் வர சம்மதித்து பிறகு மூன்றில் இருந்து அப்பா வரும் ஆறு மணி வரை வரும் உலக மகா யுத்தமான WWF Wrestlingயையும் பார்த்து விட முடியுமென்ற நினைவு வந்து சந்தோஷம் இரு மடங்காக்கியது.
அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பொறியியல் முதலாம் ஆண்டு இறுதியில் T-Joint/V-Joint/புறாவால்-Joint என்று ஏதேதோ 'Joint' பற்றி Workshop வாத்தியார் சொல்லும் பொழுதெல்லாம் பின்னால் எழும் சிரிப்பொலிகளினிடையே Grass-ன் அர்த்தத்தைக் கண்டடைந்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அன்பு நண்பரே! நன்கு எழுத வருகி?றது உங்களுக்கு. அலகிலா விளையாட்டு என எழுதியுள்ளீர்கள். அருமை! எத்தனை பேருக்குப் புரியும் அந்து usage?
நன்றி :-)
I was able get the "Joint, grass" connection. But did not get the "alagilaa vilayattu" thing behind it. Did I miss something else ?
சந்தோஷ்,
பெரிதாக ஒரு அர்த்தமும் இல்லை. ஆண்டவனின் விளையாட்டு என்று பொருள்.
what is joint grass connection?
i dont understand...
Grass - கஞ்சா..
Joint - கஞ்சாவை சிகரெட்டுல் வுருட்டி புகைப்பது..
நன்றி. முன்பே சொல்ல மறந்தது, உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது (ஒரு சிறுகதையினைப் போல இருந்தது. இறுதியில் ஒரு திருப்பத்தோடும், கொஞ்சம் புரியாததால் கூட ;-) )
சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்வி: அது என்ன பராக்கா என்று பெயர் ? ஒபாமாவுக்கு சொந்தகாரரா நீங்க :) ?
பராகா ஒரு Sufi Word. Blessing, Breath என்று பல அர்த்தங்கள். நான் அந்த பெயரை ‘Baraka' என்ற படத்தை பார்த்த பின் வைத்துக்கொண்டேன். அது ஒரு non-verbal படம். சினிமா பாரடெஸோவில் கிடைக்கும். அவசியம் வாங்கிப் பாருங்கள
Post a Comment