Sunday, July 27, 2008

Saturday, July 26, 2008

Thursday, July 10, 2008

Monday, July 7, 2008

பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 2


“Nothing exists except atoms and empty space; everything else is opinion”

- Democritus

"The whole is greater than the sum of its parts."

- Aristotle

”உண்மைநிலை(Reality) என்பதின் அடிப்படை இயல்பு என்ன? அது எதனால் ஆனது? பூரண-முழுமையினாலா (wholistic)? அல்லது பிளவுபடா மூலாதார துகள்களாலா? (Atomistic)" . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடாமிஸத்திற்கும், ஹோலிஸத்திற்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டை மெய்யியலின் முக்கியமான பிரச்சனைககளில் ஒன்று.

கிரேக்க மெய்யியலில் டெமாகிரடஸை அடாமிஸத்தின் தொடக்கப் புள்ளி எனலாம். இப்பிரபஞ்சம் பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்றும் அனைத்து பருப்பொருட்களும்(Matter) அணுக்கள் சூனியத்தில்(void) சிதறி மாறுபடுவதற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்றும் கூறினார். (அதற்கு முன்பு தால்ஸ் உண்மைநிலையின் மூலாதாரம் தண்ணீர் என்றும், அனாக்ஸிமெனஸ் காற்று என்றும், ஹெராகிளடஸ் நெருப்பு என்றும் கூறி வந்தாலும் டெமாகிரட்ஸ்ஸே அடாமிஸட்தின் துவக்கப் புள்ளியாக கருதப்படுகிறார்). அணுக்கள் என்னற்ற அளவுகளில், வடிவங்களில் உள்ளன என்றாலும் அவற்றின் ஆதார இயல்பு ஒன்றே என்றும் அணுக்களும், சூனியமும் தொடக்கமும், முடிவும் இன்றி போய்க்கொண்டே இருப்பவை என்றும் டெமாகிரடஸ் கூறினார்.

இதன் மற்றொருபுரம் பரமெனிடிஸ் என்பவர் சூனியமும், மாற்றமும் ஒருவித மாயை என்றும் இப்பிரபஞ்சம் அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமையினால் ஆனது என்றும் கூறி வந்தார். இவ்வாறு டெமாகிரடஸும் அவரது சீடர்களும் அடாமிஸத்தையும் பரமெனிடிஸும் அவரது சீடர்களும் ஹோலிஸத்தையும்(Wholism) வலியிறுத்திக் கொண்டு இருந்தார்கள். அதன் பிறகு பிளாட்டோ, அரிஸ்டாடில், எபிகியூரஸ் என்று தொடர்ந்து நடந்த இவ்விவாதம் பலவகைகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. (அடாமிஸம் மற்றும் ஹோலிஸம் என்பது மேற்கத்திய மரபில் மட்டும் அல்லாமல் நம் மரபிலும் உள்ளது. நியாயவைசேஷிகத்தில் அடாமிஸக் கோட்பாடுகள் சிலவற்றைப் பார்க்கலாம். அதே போல் நியாயா மற்றும் மீமாம்ச தரிசனங்களில் முழுமை(a-KshanDa) மற்றும் சிதறல்(KshanDa) போன்ற கருத்துகளைக் காணலாம். இதே போல் பௌதத்திலும் உள்ளது. இவை அடாமிஸம் மற்றும் ஹோலிஸம் போல் தோன்றினலும் பல நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி நான் இப்பொழுது படித்து கொண்டு இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை. ஜெயமோகனின் கீதை குறித்த கட்டுரைகள் இது பற்றி விரிவாகப் பேசுகின்றன).

அரிஸ்டாடிலின் வருகைக்குப் பிறகு அடாமிஸம் வலுவிழந்தது. பிறகு மறுமலர்ச்சி காலத்தின் போது அடாமிஸம் மீண்டு எழுந்தது. பிரான்ஸிஸ் பேகன், கலிலியோ, தெகார்த்தே போன்றோர் மீண்டும் அடாமிஸக் கோட்பாடுகளை வலியுறுத்தத் தொடங்கினார்கள். பிரபஞ்சம் என்பது பிளவுபடா மூலாதார துகள்கலான அணுக்களால் ஆனது என்ற ஜான் டால்டனின் ‘அணுக் கொள்கை' போன்றவைகளால் அடாமிஸம் மேலும் வலுவடைந்தது. அணுக் கொள்கைக்குப் பிறகு ஹோலிஸம் அதோடு அவ்வளவுதான் என்றும் நம்பப்பட்டது.

பிறகு ஜே.ஜே.தாம்சன் எலக்டரானைக் கண்டுபிடித்தார். விரைவில் அணுக்கருவும், அணுக்கருவில் உள்ள ப்ரோடானும், நியுட்ரானும் கண்டுபிடிக்கப்பட்டது. அணுக்களே பிளவுபடா அடிப்படை அலகு என்ற நம்பிக்கை இவ்வாறு தகர்க்கப்பட்டது. அதன் பின்னர் ப்ரோட்டானும், நியுட்ரானும் தான் பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு என்று நம்பப்பட்டது. சில காலம் கழித்து அவையும் அடிப்படை அலகு அல்ல என்றும் ஒர் அடிப்படை துகளின் சுற்றுக்கேற்ப(spin) அவை ஃபெர்மியான்களாகவும்(Fermion), போஸான்களாகவும்(Boson) இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஃபெர்மியான்களுல் குவார்க்ஸ், லெப்டான்ஸ் மற்றும் போஸான்களுல் காஜ் போஸான், ஹிக்ஸ் போஸான் என்று பல பிரிவுகள். அதனிலும் பல உட்பிரிவுகள். (இயற்பியல் பற்றிய பதிவு அல்ல இது என்பதால் இவை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்). அதே சமயம் ஃபேரடேவின்(Faraday) கொள்கைகளை உபயோகித்து ஜேம்ஸ் கிளெர்க் மாக்ஸ்வெல் எலக்ரோமேக்னடிக் கோட்பாடை முன்வைத்தார். தொடர் அலைகள் (continuum field) என்ற மாக்ஸ்வெல்லின் தியரியானது திட்டவட்ட அடிப்படை அலகு என்ற நோக்குடைய அடாமிஸத்திற்கு மேலும் சவாலை உண்டாக்கியது. பிறகு வந்த ஹிஸன்பெர்க், மாக்ஸ் பிளான்க், பால் டிராக், உல்ஃப்காங் பாலி, நீல் போர், ஷ்ரோடிங்கர், ஐன்ஸ்டைன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட குவாண்டம் மெக்கானிக்ஸ் இவ்வகை அடிப்படை துகள்களை வரையருப்பதில் உள்ள சிக்கல்களைக் கோடிட்டு காட்டியது. Grand Unification Theory, String Theory (அல்லது M-theory) போன்றவை அனைத்து சக்திகளையும் உள்ளடக்கி விளக்கக்கூடிய திசையை நோக்கி இன்று சென்று கொண்டிருக்கிறது.

டெமாகிரடஸில் ஆரம்பித்து இன்று வரை நாம் வெகு தூரம் வந்திருந்தாலும் இன்றும் கூட அடிப்படை மூலாதார துகள்கள் குறித்த திட்டவட்ட, உறுதியான வரையருகள் எதுவும் இல்லை என்பதே உண்மை. இவைகள் யூகங்களாகவும், ஹேஷ்யங்களாகவும் தான் இன்றும் இருந்து வருகின்றன. புகழ்பெற்ற விண்பௌதீக விஞ்ஞானியான ஆர்தூர் எடிங்டனிடம் ஒருவர் குவாண்டம் இயற்பியலை ஒரே வரியில் விளக்க முடியுமா என்று கேட்டதற்கு அவர், ‘Something unknown is doing we don’t know what' என்று கூறினார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுரம் ஹோலிஸம்(Wholism) என்பதற்கு பரமெனிடிஸ் கூறிய விளக்கமான, 'அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு மாற்றமில்லா முழுமை (all-encompassive, unchanging unity)' என்பது 'அனைத்தையும் உள்ளடக்கி முன்னேறும் முழுமை' (all-encompassive, evolving unity) என்பதாக மறுஆக்கம் செய்யப்பட்டது. ஜான் ஸ்மட்ஸ் (Jan Smuts) என்பவர் இந்த மறுஆக்கம் செய்யப்பட்ட வேறுபாடைத் தெளிவுபடுத்துவதற்காக 'Wholism' என்பதற்கு பதில் ‘Holism' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். ஹோலிஸம்(Holism) என்பதை “"The tendency in nature to form wholes that are greater than the sum of the parts through creative evolution." என்று விளக்கினார். அரிஸ்டாட்டிலின் மறுவருகை போல்.

இயற்பியல் உட்பட பல்வேறு துறைகளில் ஹோலிஸ முழுமை நோக்கிற்கான அறைக்கூவல் விடுக்கப்பட்டது. (Call for a holistic approach). ஹோலிஸத்திற்கு பலவகை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ”குவாண்டம் மீபொருண்மைவாதம்”(Quantum Mysticism) போன்றவை உண்மைநிலை என்பது குவார்க், ப்ரோட்டான், அணு, செல், மனிதர்கள், செடிகள், நட்சத்திரங்கள், கோள்கல், மண்டலங்கள் போன்ற தனி நிறைக்கூறுகள்(seperate entities) அல்ல என்றும் இவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருக்கும் ஒரு மாபெரும் சங்கிலித்தொடர் போன்றவை என்று வலியுறுத்த ஆரம்பித்தன. விவேகானந்தர் உட்பட பலர் நவீன பௌதீகம் வந்தடைந்த முடிவுகளை பலநூறாண்டுகளுக்கு முன்பே வேதாந்தம் கண்டைந்துள்ளது என்று கூறினர். இவ்வகை விளக்கங்கள் பல இயற்பியல் விஞ்ஞானிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. குவாண்டம் இயற்பியலின் போதாமைகளை ஒத்துக் கொண்ட ஆர்துர் எடிங்டன் கூட இவ்வகை நோக்குகளை - "We should suspect an intention to reduce God to a system of differential equations. That fiasco at any rate must be avoided." என்று கடுமையாக விமர்சித்தே வந்தார்.

ஹோலிஸ நோக்கை ஆதாரமாகக் கொண்டு பலவகை அணுகுமுறைகள் உருவாக ஆரம்பித்தன. சிஸ்டம்ஸ் தியரி(Systems theory), காம்ப்லெக்ஸிடி தியரி(Complexity theory), சைபர்நெடிக்ஸ்(Cybernetics) என்று பல. ஒரு துறைசார் கொள்கைகளில் உள்ள போதாமைகளை உணர்ந்து பல்வேறு துறைகளின், அமைப்புகளின் உதவியோடு பல cross-domain, multi-disciplinary அராய்ச்சி மையங்கள் உருவாக்கப்பட்டன. உளவியல் மற்றும் மருத்துவத்தில் இருந்து மானுடவியல், கல்வி, சுகாதாரம், சூழலியல் வரையிலான பல்வேறு துறைகள் இவ்வகை ஆராய்ச்சி முறைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

பிறகு வந்த பின்அமைப்புவாதமும்(Poststructuralism), பின்நவீனத்துவமும்(Postmodernism) இவ்வகை முழுமுதற் உண்மை, ஒருமை, ஒட்டுமொத்த சாராம்ச நோக்கு போன்றவற்றுக்கு எதிர்குரலாக அமைந்தது. அடாமிஸமும் சரி ஹோலிஸமும் சரி கருத்ததிகார நோக்கையே ஆதாரமாகக் கொண்டது என்றும் ஒன்றை அடக்கி மற்றொன்றை மீட்க முயலும் ஆதிக்கவிருப்புறுதியே இவ்வகை கோட்பாடுகளின் அடிப்படை என்று பின்நவீனத்துவம் கூறியது. தெலூஸ்(Deleuze) மற்றும் கத்தாரி(Guattari) அடாமிஸம் மற்றும் ஹோலிஸதிற்கு பதில் ‘ரிசோம்' (Rhizome) என்ற கூற்றை முன்வைத்தார்கள். ரிசோம் திட்டவட்ட பகுப்புமுறைகளுக்கும், வரைமுறை அமைப்புகளுக்கும்(arborescence), அடுக்குகளுக்கும்(hierarchy) எதிரானது. உதாரணமாக கல்விப் பாடத்திட்ட வடிவமைப்பில் காணப்படும் நிபுணர்சார்ந்த மைய திட்டமைப்புக்கு(centralized design done by specialists) எதிரான ஒன்று ரிசோமாட்டிக் முறை. இவ்வகை திட்டங்களை ஒற்றைக் குழுவால் ஏற்படுத்தவே முடியாது என்றும் இவற்றை பல தரப்பினரும் சேர்ந்து விவாதித்தே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் கூறுகிறது. கல்வி மற்றும் கற்றல் என்பது தொடர் Negotiation என்றும் தனி ஒருவரின் தன்மைக்கேற்ப இவ்வகை திட்டங்களை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்கக்கூடிய வசதி இருக்க வேண்டும் (multiple entry and exit points) என்றும் வலியிறுத்துகிறது. இன்று தகவல் தொழில் நுட்பத்தில் உள்ள போக்கான Web2.0வில் காணப்படும் Folksnomies, Wikinomics, User-Generated content, Wisdom of the crowds, Collaborative content development, Long Tail business models போன்ற முறைகள் ஒருவகையில் ரிசோமாட்டிக்கின் அடிப்படையிலேயே அமைந்துள்ளவைகளே.

இது ஒரு சிறந்த வழிமுறையாக இருந்தாலும் இவற்றிலும் சில குறைபாடுகள் உள்ளன. ரிசோம் போன்ற ஒரு வழிமுறையைக் கொண்டு உளவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஆராய்ச்சிகள் எதையும் சரிவர செய்ய முடியவில்லை என்பதே உண்மை. ஒரு வகையில் திட்டவட்ட ‘ஆராய்ச்சி முடிவுகள்', ‘நிபுணத்துவம்' போன்றவற்றையே அது நிராகிக்கிறது. இப்படி இருக்க ஒரு நரம்பியல் நோய்க்கூறுக்கோ அல்லது ஒரு இருதயம் சார்ந்த கோளாறுக்கோ திடமான பரிந்துரைகளை எப்படி ஒரு மருத்துவரால் கொடுக்க இயலும்? இவ்வாறு இம்முறையிலும் பல போதாமைகள் இனம் காணப்பட்டது.

*-*-*

மேற்கூறியவைகள் அனைத்தும் சிறு எளிமைப்படுத்தப்பட்ட உதாரணங்களே. இது போல் பல்வேறு தளங்களில் பல்வேறு பிரச்சனைப்பாடுகள். இவ்வனைத்து கோட்பாடுகளிலும் பல முக்கியமான உண்மைகள் உள்ளன. கூடவே சில குறைகபாடுகளும்.

அடாமிஸக் கொள்கை பகுத்தாராய்வதிற்கு பேருதவியாக இருந்தது. உயிரியல், மருத்துவம் போன்ற துறைகளுக்கு பகுத்தாய்வுமுறையே அடிப்படையாக இருந்தது. ஹோலிசம் தொகுத்தாய்வதற்கு உதவியாக இருந்தது. சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றுக்கு இவையே அடிப்படை. அதே போல் இயற்பியல், உளவியல், கணிதம் போன்ற துறைகளுக்கு இவை இரண்டுமே முக்கியமாக இருந்தன. நம் வளர்ச்சியின் அனைத்து காலகட்டங்களிலும் இம்முறைகளே நமக்கு தூண்டுகோள்களாக இருந்தன.

ஆனால் இம்முறைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உண்மைநிலையை ஒற்றைப்படையாகவே பார்த்து வருகின்றன. முன்பு நாம் பார்த்தது போல் அடாமிஸம் என்பது ஒருவகை சுருக்குதல்(Reductionism). இதன் எதிர் திசையில் பயனிக்க முற்பட்ட ஹோலிஸமும், அடாமிஸம் சுருக்கியவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்க (Elevationism) நினைத்து அதுவும் சுருக்குதலிலேயே வந்து முடிந்தது.

இவற்றால் எண்ணற்ற பயன்கள் இருந்தும் - உளப்பகுப்பாய்வில் இருந்து யூங்கின் INTP / Myers-Briggs Type indicator வரை, பொருளாதாரக் கோட்பாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வரை - இக்கோட்பாடுகள் அனைத்தும் இதன் ஆதார நோக்குக்கு எதிராகவே இருந்து வந்தன. ”அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை” என்ற நோக்கைக் கொண்ட ஹோலிஸம்(Holism) பலவற்றை தொடர்ந்து உதாசீனப்படுத்தியே வருகிறது. இதற்கும் சில வரையறைகள், எல்லைகள் உண்டு. உதாரணமாக சிஸ்டம்ஸ் தியரியைக் கொண்டு நம்மால் அசோகமித்திரனை உள்வாங்க முடியாது. காம்ப்லெக்ஸிடி தியரியைக் கொண்டு ”ஆழி சூழ் உலகினுள்” நம்மால் பயனிக்க முடியாது. சைபர்நெடிக்ஸைக் கொண்டு இளையராஜாவின் இசையினுள் நுழைய முடியாது. அதே போல் அடாமிஸக் கோட்பாட்டைக் கொண்டு கூட்டுநனவிலியைப் புரிந்து கொள்ள முடியாது. Grand unified தியரியைக் கொண்டு Raskolnikovவின் பெருந்துயரத்தை உணர முடியாது. String தியரியைக் கொண்டு நதியில் முடிவில்லாமல் படரும் நிலவொளியின் அழகை விவரிக்க இயலாது. முழுமை, பிளவுபடா உண்மை என்று வரையறை செய்யும் இவைகள் யதார்த்தத்தின் ஒரு பக்கத்துடன் மட்டுமே உரையாடுகின்றன. ஒற்றை நிழலை மட்டுமே பிரதிபலிக்கின்றன. அந்நிழலையே உண்மையயென்றும் நம்புகின்றன.

யதார்தத்தின் நுண்ணிய அவதானிப்புகளை, என்னற்ற தளங்களை எல்லாம் பருப்பொருட்களாகவே(Matter) இவை சுருக்க முட்படுகின்றன. சிஸ்டம்ஸ் மற்றும் காம்ப்லெக்ஸிட்டி தியரியும் சரி, ஸ்டிரிங் தியரியும் சரி அனைத்தையும் பருப்பொருட்களைக் கொண்டே விவரிக்க முற்படுகின்றன. இதையே ”முழுமைநோக்கு” என்ற அர்த்தத்தில் இவை எடுத்துக் கொள்கின்றன.

இவ்வித நோக்கைக் கொண்டு ஆராயப்படும் பிரபஞ்ச நோக்கை ‘ஒற்றைப் பரிமாணமுள்ள தட்டையான உலகம்' (One-Dimensional Flatland) என்று கென் வில்பர் கூறுகிறார்.

*-*-*

உண்மை நிலை மற்றும் யதார்த்தம் என்பது இந்த அளவு தட்டையான, ஒற்றைப்பரிமாணமுள்ள ஒன்று அல்ல. அது பல நிலைகளால், பல தளங்களால், அடுக்குகளால் ஆனது என்கிறார். யதார்தத்தின் பல தளங்களை அறிய ஒரு பொது வடிவத்தை பிளாடினஸில் இருந்து அரவிந்தர் வரை கொடுத்துள்ளனர். அதையே ஹஸ்டன் ஸ்மித், ஹக்ஸ்லி போன்றோர் மேலும் விரிவுபடுத்தினர். ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' (Great Chain of Being) என்று அதை கூறுகின்றனர்.

பல்வேறு புராதன மதங்களுக்கிடையே(pre-modern religions) என்னற்ற வேறுபாடுகள் இருந்தாலும் பெரும்பாலானவை ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' என்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஒரு அடுக்கை(level) அரவணைத்து மற்றொரு அடுக்கு எழுவதால் இதை ‘இருப்பின் மாபெரும் சங்கிலி' என்று சொல்வதைவிட ‘இருப்பின் மாபெரும் கூடு' (Great Nest of Being) என்று சொல்வதே பொருத்தமானது. அரவணைத்து எழுதல் (Transcend & Include) என்பதே இவற்றின் ஆதார நோக்கு. அதாவது பருப்பொருளை(Matter)அரவணைத்து எழுவதே உயிர்(Life). உயிர் என்பது பருப்பொருட்களை உள்ளடக்கிய ஒன்று. ஆனால் பருப்பொருள்கள் மட்டுமே உயிர் அன்று. அதே போல் உயிரை உள்ளடக்கி எழுவது மனம்(Mind). ஆனால் உயிர் மட்டுமே மனம் அன்று. இவ்வாறு ஒன்றை உள்ளடக்கி மற்றொன்று எழுகிறது. பிளாடினஸ் இதை ‘a development that is envelopment' என்று ரத்தினச்சுருக்கமாக கூறுகிறார். வேதாந்தத்தில் இதையே அன்னமயகோஷா(the sheath or level made of physical food), பிராணமயகோஷா (the level made of élan vital), மனோமயகோஷா(the level made of mind), விஞ்ஞானமயகோஷா (the level made of higher mind or soul), ஆனந்தமயகோஷா(the level made of transcendental bliss or causal spirit) என்று கூறுப்படுகிறது. ஆனால் இவை அனைத்துமே தூய இருப்பின் பலவகைப்பட்ட தோற்றங்களே (Manifestations of the Spirt). தூய இருப்பு ஒரு காகிதம் போல். நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் மானிட்டர் ஸ்கிரீன் போல். அதில் இருக்கும் உள்ளடக்கமே பருப்பொருள், உயிர், மனம் மற்ற அனைத்தும். இத்தூய இருப்பையே வேதாந்தம் 'தூரியா', ‘தூரியதித்தா'(nondual, ever-present, unqualifiable Spirit-as-such) என்று கூறுகிறது.

*-*-*

இக்கட்டுரையின் முதலில் கேட்கக்பட்ட கேள்விக்கு (உண்மைநிலை என்பதின் அடிப்படை இயல்பு என்ன? பூரண-முழுமையா? அல்லது மூலாதார துகள்களா?) ‘இருப்பின் மாபெரும் கூடு' என்ற நோக்கை வைத்து பதில் அளிக்க முயற்சித்தால் அதன் விடை - ‘இரண்டுமே' அல்லது ‘இரண்டுமே அல்ல' என்பதில் வந்து முடிவடைகிறது.

அதாவது உண்மை நிலையானது பூரண-முழுமையாகவும், மூலாதார துகள்களாகவும் ஒரே சமயத்தில் இருக்கும் ‘ஹோலான்களால்'(Holons) ஆனது. ஹோலான் என்ற வார்த்தையை ஆர்துர் கீஸ்லர் முதன்முதலில் தனது ‘The Ghost and the Machine' என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தினார். ஹோலான் என்பதின் அர்த்தம் ”முழுமை/பகுதி” (whole/part) ஆகும். ஒரே சமயம் ஒன்றை உள்ளடக்கியும் மற்றொன்றின் பகுதியாகவும் அது இருக்கும். உதாரணமாக ‘அணுத்திரளை'(Molecule) என்பது ஒரு 'அணுவை' உள்ளடக்கியது. அதே சமயம் 'அணுத்திரளை' 'செல்லின்' (Cell) ஒரு பகுதியும் கூட. ‘வார்த்தை' ‘எழுத்துக்களால்' ஆனது. 'வார்த்தை' ‘வாக்கியத்தினுள்' உள்ள ஒரு பாகமே 'வாக்கியம்' 'வார்த்தகளால்' கட்டமைக்கப்பட்டுள்ளது. 'பத்தியின்' பாகமே 'வாக்கியம்'. இப்படி ஒரே சமயம் ஒன்றின் பகுதியாகவும் ஒன்றை உள்ளடக்கியும் இருப்பதே ஹோலான் ஆகும். ‘அடாமிஸமா? அல்லது ஹோலிஸமா?', ‘முழுமையா? அல்லது பகுதியா?' போன்ற இரண்டாயிரம் ஆண்டு பிரச்சைனைக்கு ஒரு வழியாக தீர்வு வந்தது.

ஹோலான்கள் புரிதலின் வசதிக்காக நிறுவப்பட்ட ஒரு கருத்துவடிவமே. “இதுதான்” பிளவுபடா மூலாதாரக் கூறு என்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் இன்று மறுக்கப்பட்டு வருவதைக் கண்டு அவ்வகை நோக்கிற்கு எதிர்வினையாக உருவாக்கப்பட்ட கருத்துருவமே ஹோலான்கள் ஆகும். ப்ரோட்டான், நியூட்ரான் போல் இதை ஒரு திட்டவட்ட புறவய வடிவமாக கருதக் கூடாது. இந்த புரிதல் அவசியம். ஒரே சமயம் ஒன்றை உள்ளடக்கியும் மற்றொன்றின் பகுதியாகவும் இருப்பதே அது. ப்ரோடான்களும், நியுட்ரான்களும் கூட ஹோலான்களே. குவார்க், லெப்டான், ஃபெர்மியான், போஸான், ஹாட்ரான், அணுக்கரு, அணு, அணுத்திரளை, தனிமம், சேர்மம் என்று கேலக்ஸி, கிளஸ்டர்ஸ், சூப்பர்கிளஸ்டர்ஸ் வரை முடிவேயில்லாமல் போய்க்கொண்டே இருப்பது இது.

பல்வேறு தளங்களில், பல்வேறு துறைகளிலும் ஹோலான்களைக் காணலாம். உயிரியல், கணிதம், இயற்பியல், மொழியியலில் இருந்து பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பம் வரை. Bits, Bytes, variables, functions/classes, programs, packages, portlets/widgets, mash-ups, Dashboard, Portals, Meta Portals என்று இதை நிரல்மொழி போன்ற தளங்களிலும் இதைக் காணலாம். ‘Turtles all the way up, all the way down' என்பது போல். (ஹோலான்கலில் இருந்து ஹீப்ஸ் மற்றும் ஆர்டிஃபேக்ட்ஸ்களுக்கு சில நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு அறிமுகப் பதிவு என்பதால் ஹீப்ஸ் மற்றும் ஆர்டிஃபேக்ட்ஸ் குறித்து இங்கு பேச முற்படவில்லை. விருப்பமுள்ளவர்கள் இந்தப் பதிவுக்குச் சென்று இவற்றைப் பற்றி படிக்கலாம்.)

இவ்வகை ஹோலான்களால் உருவாகும் தொடர் அடுக்குகளை ஹோலார்க்கி(Holarchy) என்று ஆர்துர் கீஸ்லர் கூறினார். இயல்பாக இயற்கையில் தென்படும் அடுக்குகளே(Natural Hierarchies) இவை.

இன்று அடுக்குகள்(Hierarchies) என்ற வார்த்தை எதிர்மறையான அர்த்தத்திலேயே உள்வாங்கப்படுகிறது. பலவித குரூர ஒடுக்குமுறைகளுக்குக் காரணம் இவ்வித அடுக்குகளே என்று நம்பப்படுகிறது. அவை உண்மையே. ஆனால் இவ்வகை அடுக்குகள் அடுக்கதிகாரங்கள்(Dominator Hierarchies) ஆகும். இதன் மறுபுரம் இயற்கையாக, ஹோலான்களை உள்ளடக்கி காணப்படும் அடுக்குகள் வளர்ச்சி அடுக்குகள் (Growth Hierarchies) ஆகும். இதுவே ஹோலார்க்கியும் ஆகும். ஒன்றை அரவணைத்து எழுவதே(Transcend and include) இதன் அடிப்படை.

அதே சமயம் வளர்ச்சி அடுக்குகள் அடுக்கதிகாரங்களாக மாற வாய்ப்புகளும் உள்ளன. பின்நவீனத்துவம் முன்வைக்கும் எதிர்-அடுக்கு(Anti-hierarchy) போன்ற கொள்கைகள்களும் கூட அடுக்கதிகாரங்களாக ஆகும் வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

*-*-*

வற்றாத தத்துவத்தின்(Perennial Philosophy) சாரமாக விளங்கும் ‘இருப்பின் மாபெரும் கூடு' பற்றி கென் வில்பர் ஆழமாக படித்து வந்தார். அதன் எளிமையில் உள்ள அழகு அவரை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதே சமயம் அதில் உள்ள சிறு சிறு பிழைகள் அவரை உறுத்தின. அவற்றைப் பிழைகள் என்று சொல்வதை விட பொருள் விளக்கத்தில்(Interpretation) ஏற்பட்ட தவறுகள் என்று சொல்வதே சரி. ஆன்மீக அனுபவத்தை மீபொருண்மைவாத(Metaphysics) நோக்கில் விளக்கம் அளிக்க முற்படும் போது இவ்வகை தவறுகள் ஏற்படவே செய்கின்றன. வில்பர் இவ்வகை விளக்கங்களில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். இதில் நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது 'அனுபவத்தை' அவர் கேள்விக்குட்படுத்தவில்லை. அனுபத்தைப் பற்றிய 'விளக்கங்களையே' கேள்விக்குட்படுத்தினார். இவ்வகை தவறான விளக்கங்களை பின்நவீனத்துவம் தன் கையில் எடுத்துக் கொண்டு, ”மக்களை ஒடுக்கி, அடிமைப்படுத்துவதற்கான அடுக்கதிகாரங்களே 'வற்றாத தத்துவம்' என்ற முகமூடி அணிந்து வந்தது” என்பது போன்ற தீவிர முடிவுக்கு வந்தது.

இவ்வகை முடிவுகளும் தவறானவையே என்பது வில்பரின வாதம். இக்கருத்து வேற்றுமைகளைக் களைவதற்கு இருதரப்பு கருத்துகளையும்(Thesis/Antithesis) நுட்பமாக பரிசீலித்து உற்றுநோக்கி தொகுக்க(Synthesis) முற்படவேண்டும் என்பதே வில்பரின் கனவு. அதையே முழுமைநோக்கு(Integral Approach) என்று கூறுகிறார். ஒன்றை ஒடுக்கி மற்றொன்றை மீட்க முயலும் முறை அல்ல இது. அனைத்தையும் அரவணைத்து எழும் முறையே (Transcend and Include) இது.

உதாரணமாக ‘இருப்பின் மாபெரும் கூடு' பருப்பொருளை கூட்டின் முதல் அடுக்காக(Level1), உள்விரிவுகளே இல்லாத ஒன்றாக பார்க்கிறது. இவ்வகை மீபொருண்மைவாத விளக்கத்தைக் கொஞ்சம் நீடித்து யோசித்தால் மனித மூளை(Matter/Level1) போன்ற ஒரு அமைப்பைவிட ஒரு புழுவின் உணர்ச்சிகள்(Life/Level2) சிக்கலானவை என்பது போன்ற அர்த்தத்தில் அது முடியும். நவீன அறிவியலின்படி இவ்வகை நோக்குகள் தவறானவை. மனித மூளை மிக சிக்கலான ஒரு அமைப்பைக் கொண்டது.

அதே போல் பருப்பொருள் என்பது உள்விரிவே இல்லாத ஒன்று அல்ல. மாறாக பருப்பொருட்கள் நாம் உள்ளார்ந்து உணரும் ஒன்றின் வெளிவடிவங்களே (exterior dimensions). உதாரணமாக 'consciousness' என்பது உள்வடிவம்(interior dimension). 'Neurophysiology' அதன் வெளிவடிவம்(exterior dimension). ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். புத்த பிக்கு தியான நிலையில் உணரும் அனுபவம் அகவயமான ஒன்று(interior dimension). ஆனால் அதற்கேற்ப டெல்டா அலைகளில், டொபோமின் அளவுகளில் ஏற்படும் மாறுதல்கள், தொடர்புறுகள்(correlations) புறவயமானது. ஒன்றை மற்றொன்றாக சுருக்க முயல்வதே கருத்தியல் தளங்களில் நிலவி வரும் பல பிரச்சனைகளுக்குக் காரணம்.

இதனால் மேலுள்ள படத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ‘இருப்பின் மாபெரும் கூடு' என்பதை கீழுள்ள வரைபடத்தில் உள்ளது போல் வில்பர் சிறிது மாற்றியமைத்தார்.
அக்காலத்தில் வெளிவடிவங்களை உணர்ந்து, விவரிக்க வசதிகள் இல்லை. தியானம், யோகம் போன்ற introspective phenomenology முறைகளை மட்டும் கொண்டு டோப்போமைனிலும், டெல்டா அலைகளிலும் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து, விளக்குவது கடினம். அப்படி விளக்க முற்படும் போது இவ்வகை தவறுகள் நிகழ்கின்றன. 'இருப்பின் மாபெரும் கூடு' போன்றவற்றின் போதாமைகளும் இவையே. இவற்றைக் கடந்து வெளிவடிவங்களைக் கண்டடைவதற்கு நவீன அறிவியலே நமக்கு உதவுகிறது. இன்று சங்கரர் இருந்திருந்தால் 'நாடிகளுக்கும்'(Nadis), நியுரோடிரான்ஸ்மீட்டகளுக்கும் உள்ள உறவைப் பற்றி எழுதியிருப்பார் என்றும் வில்பர் கூறுகிறார்.

*-*-*

இவ்வாறாக உள்வடிவம், வெளிவடிவம் போன்றவை உண்மைநிலையின், தூயஇருப்பின் பல்வேறு அவதானிப்புகள் என்று கூறுகிறார். உள்வடிவம், வெளிவடிவம் என்பதை மேலும் விரிவுபடுத்தி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நான்கு காற்பகுதிகளைக்(Quadrants) கொண்டு விளக்குகிறார்.

மேலுள்ள வரைபடங்களே முழுமைநோக்கின் முதுகெலும்பு போல். இதன் இடதுபுரம் உள்ளவை அனைத்தும் உள்வடிவங்கள்(Interior dimensions). வலதுபுரம் உள்ளவை அனைத்தும் வெளிவடிவங்கள்(Exterior dimensions).
அதே போல் மேற்புரம் உள்ளவை தனிநபர் சார்ந்தவை (Individual). கீழ்புறம் உள்ளவை குழு சார்ந்தவை (Collective). இவ்வாறு உள்வடிவம், வெளிவடிவம், தனிநபர், குழு போன்ற நான்கு பார்வைகளையும்(Perspectives) உள்ளடக்கி ஒவ்வொரு காற்பகுதிகயையும் கீழே கூறப்பட்டுள்ளது போல் வறையறை செய்யலாம்.

  1. மேல்-இடது காற்பகுதி(Upper Left) ---> Subjective(அகவயம்) / Interior-Intentional
  2. மேல்-வலது காற்பகுதி(Upper Right) ---> Objective(புறவயம்)/ Interior-Behavioural
  3. கீழ்-இடது காற்பகுதி (Lower Left) ----> Inter-subjective / Collective-Cultural
  4. கீழ்-வலது காற்பகுதி(Lower Right) ---> Inter-objective. / Collective-Social


இந்த நான்கு காற்பகுதிகளும் நான்கு வித பார்வைகளை(Perspectives) முன்வைக்கின்றன. Subjective, Inter-subjective, Objective, Inter-objective என்பதை கொஞ்சம் எளிமைப் படுத்தி நான்(I), நாம்(We), அது(IT), அவை(ITS) என்று தொகுக்கலாம். இதையே இன்னும் எளிமைப்படுத்தி எழுவாய்(I), முன்னிலை(We) மற்றும் படர்க்கை(IT) என்றும் கூறலாம். இவை ஒவ்வொன்றும் ஒருவித கோணங்கள், பார்வைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் இவை First-person perspective, Second-person perspective மற்றும் Third-person perspective.

நான், நாம், அது (I, We, IT) என்பதை ‘The Big Three' என்கிறார் வில்பர். புத்தம், சங்கம், தர்மம் போல்.”, "கலைகள்,அறம்,அறிவியல்” (Art,Science,Morals) போல். ”The Good, the True and the Beautiful" போல். ”சத்யம், சிவம், சுந்தரம்' போல்.

நான்(I), நாம்(We), அது(IT), அவை(ITS) என்ற பார்வைகள் ‘உண்மை' என்பதை பல்வேறு கோணங்களில், தளங்களில் விவரிக்கின்றன. 'நான்' என்ற பார்வை வலியுறுத்தும் உண்மை ‘Truthfulness' ஆகும். அதாவது தனக்குத்தானே உண்மையாக இருத்தல். அகவயமாக நம் நேர்மையை, சமரசமில்லாத நோக்கை உணர்தல். போதிசத்வனைப் போல் நமக்குள் உள்ள புத்தனை அறிதல்.

'நாம்' என்ற பார்வை வலியுறுத்துவம் உண்மை ‘Justness'. அன்பு, கனிவு, அறவுணர்வு போன்றவற்றை.

‘அது' என்ற பார்வை வலியுறுத்துவம் உண்மை ‘Truth'. அதாவது ஆராய்ந்த்து அறியும் புறவய உண்மையை.

‘அவை' என்ற பார்வை வலியிறுத்தும் உண்மை 'Functional Fit'. பௌதத்தில் கூறப்படும் ‘சங்கம்' போல்.

இவ்வாறு உண்மை என்பது ஒற்றைப்படையானது அல்ல. இந்த நான்கு பார்வைகள் பலவித நுண்ணிய வேறுபாடுகளை உடைய உண்மைகளை நமக்கு அளிக்கின்றன. இவ்வணைத்தையும் உள்ளடக்கிய ஒன்றே பேருண்மை. அதே போல் இவ்வுண்மைகள் அனைத்தும் பேருண்மையின் வெவ்வேறு வடிவங்களே என்றும் கூறுகிறார். இவ்வாறு அனைத்து தளங்களையும், அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய இவ்வரைபடத்திற்கு AQAL(All Quadrants All Levels) என்று பெயர்.

*-*-*

கீழுள்ள வரைபடம் பல்வேறு அறிவுத்துறைகளை AQAL வடிவத்திற்குள் பொருத்த முயல்கிறது.

அதாவது ஃப்ராய்ட்(Depth psychology), ஸ்கின்னர்(Behaviourism), கடாமர்(Hermeneutics), பார்ஸன்ஸ்(Structural Functionalism) போன்றவர்கள் வேறுவேறு தளங்களில் நின்றே உண்மைநிலை குறித்து பேசுகின்றனர் என்று முழுமைநோக்கு கூறுகிறது. ஃப்ராய்ட் பேசுவது தனிமனித (Individual)/Subjective(அகவயம்)/Interior-Intentional தளத்தில். ஸ்கின்னர் பேசுவது தனிமனித(Individual)/Objective(புறவயம்),/Interior-Behavioural நோக்கில்.
கடாமர் குழு சார்ந்த(Collective)/Inter-subjective/Collective-Cultural தளத்தில். பார்ஸன்ஸ் குழு சார்ந்த(Collective)/Inter-objective/Collective-Social தளத்தில்.

அந்தந்த தளங்களில் ஆழமான கருத்துகளை, உண்மைகளை இவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் இவற்றில் பல தன் கருத்தை மட்டுமே உயர்த்திப் பிடிக்க முயன்று மற்ற கருத்துத் தளங்களை ஒடுக்குகிறது. ஆனால் முழுமைநோக்கு எந்தத் தரப்பையும் சுருக்கியோ, உயர்த்திப்பிடித்தோ பேசாமல் அனைத்து தரப்பின் உண்மைகளையும் தொகுத்து உள்வாங்கிக் கொண்டு பேசு முயற்சி செய்கிறது. முன்பு கூறப்பட்டது போல் ஒரு தரப்பை மட்டும் சுருக்கியோ, உயர்த்திப்பிடித்தோ முன்வைக்கப்படும் பிரபஞ்ச நோக்கு ‘ஒற்றைப் பரிமாணமுள்ள தட்டையான உலகம்' (One-Dimensional Flatland) ஆகும்.

நவீன அறிவியல் பொருள்முதல்வாத(Scientific Materialism) நோக்கு இடதுபுரம் உள்ள அகவய உள்வடிவங்களை(Interior Dimension) புறவய வெளி வடிவங்களைக் கொண்டு(Exterior Dimension) விளக்க முற்பட்டு அகவய உள்வடிவங்களை எல்லாம் சுருக்குகிறது. புறவய வெளிவடிவ நோக்கு ‘பிரபஞ்சம்' என்று கூறும் போது அது பருப்பொருட்களால் ஆன பிரபஞ்சத்தையே(Cosmos) குறிக்கிறது. அதனால் அது ஆழமே இல்லாத, உள்வடிவங்களே இல்லாத தட்டையான பிரபஞ்சமாக இருக்கிறது. இவ்வகை ஆழமில்லா பிரபஞ்ச(Cosmos) நோக்குக்கு பதில் பிதாகரஸ் அறிமுகப்படுத்திய பிரபஞ்ச நோக்கான "Kosmos" என்பதை வில்பர் முன்வைக்கிறார். பருப்பொருள்(Physiosphere), உயிர்(Biosphere), மனம்(Noosphere) என்ற அனைத்தையும் உள்ளடக்கியதே இவ்வகை பிரபஞ்ச(Kosmos) நோக்கு. உள்வடிவங்களையும் வெளிவடிவங்களையும், அகவய நோக்கையும் புறவய நோக்கையும் உள்ளடக்கியது. தூய இருப்பின், சூனியவெளியின்(Emptiness) பிராகாசமான வெவ்வேறு தோற்றங்களே இவை(Radiant Manifestations of Spirit/Emptiness) என்கிறார் வில்பர்.

*-*-*

இன்று கருத்தியல் ரீதியாக காணப்படும் பலவகைப்பட்ட மோதல்களுக்கு ஆழமில்லாத பிரபஞ்ச நோக்கே(Flatland) காரணம். இதையே ‘Collapse of the Kosmos' என்று வில்பர் கூறுகிறார். பல உதாரணங்கள் இதற்கு. போன வருடம் வெளிவந்த அபுனைவு புத்தகங்களில் ‘Stumbling on Happiness' என்ற புத்தகம் அதிக அளவு கவனம் பெற்றது. ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உளவியல் பேராசிரியரால் எழுதப்பட்ட புத்தகம். மகிழ்ச்சி, சந்தோஷம் என்பதை Behaviourism, Cognitive Science மற்றும் Economicsஐ கொண்டு விளக்க முற்பட்டது. AQAL வரைபடத்தோடு இவ்வித ஆராய்ச்சி முறையை ஒப்பிட்டால் Behaviourism, Cognitive Science மற்றும் Economics போன்றவை வலதுபுர புறவய வெளிவடிவ நோக்கையே ஆதாரமாக கொண்டுள்ளது என்பது புரியவரும். இவ்வகை ஆராய்ச்சிகள் சில முக்கிய உண்மைகளை முன்வைத்தாலும் அதன் முடிவான நோக்கு ஆழமில்லா நோக்காகவே இருக்கிறது(Flatland).

இதனால் இனிமேல் ஆராய்ச்சிகளை எல்லாம் பலதுறை வல்லுனர்களே(Polymath) செய்ய வேண்டும் என்று முழுமைநோக்கு கூறவில்லை. ஒருதுறை நிபுணத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளாக இருப்பினும் அனைத்து நோக்குகளையும் கருத்தில் கொண்டு நாம் ஆராய்ச்சியில் இறங்கினால் இவ்வகை சுருக்குதல்களையும், கருத்தியல் மோதல்களையும், மனக் காழ்புகளையும் தவிர்க்கலாம் என்கிறது முழுமைநோக்கு.

அதே போல் இந்த நான்கு நோக்குகளுக்கும்மிடையே தொடர்புறல்கள்(Correlations) உள்ளன. ஒரு தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்ற தளங்களையும் பாதிக்கும். உதாரணமாக அன்னியப்படுத்தும் உற்பத்தி முறைகளைக்(alienating mode of production) கொண்ட சமூகத்தில் ஒரு தனிமனிதனின் தன்மதிப்பு பாதிப்புக்கு உள்ளாகும். சமூக உறவுகளிலும், குடுப்ப அமைப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். உடலியல் கூறுகளிலும் மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கலாச்சாரச் சிதைவுகளும் இருக்கக் கூடும்.

*-*-*

பிரபஞ்ச நோக்கைப்(Kosmos) பற்றி மேலும் விளக்க இருபது கோட்பாடுகளை(20 tenets) வில்பர் வகுத்துரைத்தார். பிரபஞ்சம் ஹோலான்களால் ஆனது என்பது முதற் கோட்பாடு. அனைத்து ஹோலான்களுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன. அவை 1)தன்னைக் காத்தல்(Self-Preservation, Agency), 2)மற்றொன்டோடு இணைதல்(Self-adaptation, Communion), 3)தன்னை மீறி எழுதல்(Self-Transcendence) மற்றும் 4)தன்னை அழித்தல்(Self-Dissolution). இது இரண்டாம் கோட்பாடு. அதாவது எந்த ஒரு ஹோலானும் ஒரே சமயம் ஒன்றின் பகுதியாக உள்ளடங்கியும், மற்றொன்றை உள்ளடக்கியும் இருப்பதால் அது தன்னுடைய சுயத்தையும் காத்துக் கொண்டு(Agency) தன்னை உள்ளடக்கி உள்ள முழுமைக்கும் எவ்வித பாதிப்பு வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்(Communion). இவற்றில் ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் ஹோலான் தன்னை அழித்து உப-ஹோலான்களாக உருமாறும். ஒரு செல் அழிந்தால் அது அணுத்திரளையாக(Molecule) உருமாறும். ஒரு அணுத்திரளை அழிந்தால் அது அணுவாக உருமாரும். இப்படியே இது போய்க்கொண்டிருக்கும். அதே போல் ஒரு ஹோலான் அழிந்தால் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட நிலைகள் அனைத்தும் அழிந்து போகும். ஆனால் அது உள்ளடக்கிய மற்ற கீழ்நிலைகள் அழியாமல் இருக்கும். அணுத்திரள்கள் அனைத்தும் அழிந்தால் அதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ள செல்கள், டிஸ்யூக்கள், உயிர்ப்பொருட்கள் போன்றவை அழியும். ஆனால் அணுக்கள் அழியாமல் இருக்கும். பயோஸ்பியர்(Biosphere) அழிந்தால் அதன் மேல் கட்டமைக்கப்பட்டுள்ள நுவோஸ்பியர்(Noosphere) அழியும். ஆனால் பிஸியோஸ்பியர்(Physiosphere) அழியாமல் இருக்கும்.

தன்னை அழித்தலைப் போல் தன்னை மீறி எழுதல் (Self-Transcendence) என்பதும் ஹோலான்களின் அடிப்படை பண்புகளில் ஒன்று. பரிமாண வளர்சிக்கு அதுவே தூண்டுகோள். தன்னைக் காத்தல்(Self-Preservation, Agency), மற்றொன்டோடு இணைதல்(Self-adaptation, Communion) போன்றவற்றை "Vertical Drives" என்றும் தன்னை மீறி எழுதல்(Self-Transcendence) தன்னை அழித்தல்(Self-Dissolution) போன்றவற்றை "Horizontal Drives" என்றும் கூறுகிறார்.

அதே போல் அடிப்படை(fundamental) மட்டும் குறிபிடத்தக்க(significant) போன்ற கோட்பாடுகளும் ஹோலான்களுக்கு உண்டு. தண்ணீரோடு ஒப்பிடும் போது ஹைட்ரஜன் அணு ”அடிப்படையானது”. ஆனால் தண்ணீர் ஹைட்ரஜன் அணுவை விட ”குறிப்பிடத்தக்கது”.

இதுபோல் இருபது கோட்பாடுகள். விருப்பமுள்ளவர்கள் இவற்றை முழுவதுமாக இங்கு படிக்கலாம்.

*-*-*

இவ்வாறு Atomism/Wholism--> Holism--> Integral என்று முழுமைநோக்கு விரிவடைந்து வந்துள்ளது. (இனிமேல் கட்டுரையில் 'முழுமைநோக்கு' என்னும் சொல் ‘Integral View' என்னும் அர்த்தத்திலேயே குறிப்பிடப்படும்). இது போன்ற முழுமைநோக்குக்கு இதற்கு முன் பலர் முயன்றுள்ளனர். பிளாடினஸில் இருந்து அரவிந்தர் வரை, மாஸ்லோவ்வில்(Maslow) இருந்து கெப்ஸ்ர்(Gebser) வரை Whiteheadஇல் இருந்து ஹாபர்மாஸ்(Habermas) வரை பலர் முயன்றுள்ளனர். ஹாபர்மாஸ் இன்றும் இவ்வகை நோக்கிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். வில்பரும் இவர்களின் தொடர்ச்சியாகவே தன்னைப் பார்க்கிறார்.


ஆனால் இவ்வகை ஆய்வுகளின் மேல் ஒருவித அவநம்பிகையே நமக்கு இன்று இருந்து வருகிறது. மௌனத்தை பகுத்தாய்ந்தும், தொகுத்தாய்ந்தும் அறிய விழைவது போல் உள்ளது இவ்வகை ஆய்வுகள். இது போன்ற முழுமைநோக்குகள் பல இதற்கு முன் தோல்விகளாய் முடிவடைந்ததே இவ்வித அவநம்பிக்கைக்குக் காரணம். மேலும் போலி அறிவியல்(Pseudo Science) மற்றும் நவயுக ஆன்மீகம்(New-Age Spirituality) போன்றவைகளும் அவநம்பிக்கைக்குப் பெரும் காரணங்கள். ஆனால் அறிதல் என்று வந்து விட்டாலே இவ்வகை பகுப்பாய்தல்கள், தொகுத்தாய்தல்கள் தடுக்க முடியாதவைகளாகின்றன. அதே போல், இவ்வகை பகுப்பாய்வில் ஈடுபடும் ஒருவர் இதில் சிக்குண்டு வெளிவர முடியாமல் தவித்தால், அதற்கு அவரது தன்முனைப்பு பகுப்பாயப்பட்டவட்டில் கொள்ளும் ஒருவித சுருங்கிய ஈடுப்பாடே காரணமே தவிர அதற்கு 'பகுப்பாய்வு' என்ற ஒரு ஆராய்ச்சி முறை காரணம் கிடையாது. இவைகளின் மீதி ஏறி தான் இவைகளை கடந்து செல்ல முடியும். இது ஒருவகை முரணியக்கம் போல்.

உதாரணமாக ”இயற்கை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் வல்லமை உடையது. அதனால் நீ 'எதுவும் செய்யாமல் இரு' ” என்று 'One Straw Revolution' என்ற புத்தகத்தில் மசன்பு ஃபுகாகா கூறினார். ஆனால் ஃபுகாகாவே
எண்ணற்ற கருத்தரங்கங்களுக்குச் சென்று 'இயற்கை விவசாயத்தை' வலியிறுத்திப் பேசினார். இயற்கை தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் வல்லமை உடையது தானே? பிறகு எதற்கு வேலைமெனக்கட்டு அவர் கருத்தரங்குகளில் பேச வேண்டும்?

ஃபுகாகாவின் அச்செய்கை முரண்பாடு போல இருந்தாலும் அவை முரண்பாடே அல்ல. அடுத்தகட்ட நகர்வுக்கு நம்மை, நமது சமூகத்தை நகர்த்துவதற்காக நம்முள் உள்ளுர இருக்கும் ஒரு உந்துசக்தியே இத்தகைய செய்கைக்குக் மூலக்காரணம். இந்த விசையே அவரை மாநாடுகளுக்கும், கருத்தரங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூண்டியது. அதுவே ‘இயற்கை விவசாயம்' போன்ற முறையையும் ஏற்படுத்த காரணமாக இருந்தது. ஆக ஆன்மீக ஈடுபாடு உடையவர்களுக்கு சங்கல்பம் எதுவும் இருக்கக் கூடாது போன்ற நவயுக நம்பிக்கைகளை வில்பர் கடுமையாக மறுக்கிறார். இந்த உந்து சக்தியையே வில்பர் 'Eros' என்று கூறுகிறார்(ஃப்ராய்ட் கூறிய அர்த்தத்தில் அல்ல). இவ்வகை உந்து சக்திகளில் நோய்கூறுகளும் ஏற்படலாம். ஹிட்லருக்கு ஏற்பட்டது போல். இந்த உந்து சக்தியே ஒரு தனிமனிதனை, ஒரு சமூகத்தை கீழே பிடித்தும் இழுக்கலாம். இது 'Phobos' (இதுவும் ஃப்ராய்ட் கூறிய அர்த்தத்தில் அல்ல).

இவை இரண்டின் முரணியக்கமே வளர்ச்சிக்கான எரிபொருள். (Dialectics of Progress). பகுப்பாய்வு/தொகுப்பாய்வு போன்றவை இவ்வகை உந்து சக்திகளின் விளைவுகளே. சில சமயம் விளைவுகள் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். சில சமயம் அவை நம்மை பிடித்து குழிக்குள் தள்ளவும் தள்ளலாம். எரோஸும், ஃபோபோஸும் பேருண்மையின் பகுதிகளே. பகுப்பாய்வுகளும், தொகுப்பாய்வுகளும் கூட. அவைகயும் அறிதலின் ஒரு அங்கமே.
*-*-*

இதனால் இவ்வகை முழுமைநோக்கு குறைகளேயற்ற ஒன்றாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. வில்பரின் இன்றைய நோக்குகள் கூட பல்வேறு தவறுகளை, பரிமாண வளர்ச்சிகளைத் தாண்டித் தான் வந்திருக்கின்றன. பிறகு எதற்கு முழுமை நோக்கிற்கான கனவு? இதை வில்பர் இவ்வாறு விளக்குகிறார் -

“All such attemps (for an integral, holistic view), of course, are marked by the many ways in which they fail, The many ways in which they fall short, make unwarranted-generalizations, drive specialists insane, and generally fail to achieve their stated aim of holistic embrace. It's not just that the task is beyond any one human mind; it's that the task itself is inherently undoable: knowledge expands faster than the ways to categorize it. The holistic quest is an ever-receding dream, a horiozon that constantly retreats as we approach it, a pot of gold at the end of the rainbow that we will never reach

So why even attempt the impossible? Because, I believe, a little bit of wholeness is better than none at all, and an integral vision offers considerably more wholeness than the slice-and-dice alternatives. We can be more whole, or less whole; more fragmented, or less fragmented; more alienated, or less alienated - and an integral vision invites us to be a little more whole, a little less fragmented, in our work, our lives and our destiny"
தனது கோட்பாடுகள் அனைத்தும் வரைபடங்களைப் போலவையே என்றும் வரைபடங்களையே நிலப்பகுதிகளாகக் குழப்பிக் கொள்ளக்கூடாது (Confusing Maps with Territories) என்றும் கூறுகிறார். இங்கிருந்து அந்தமான் தீவுக்குச் செல்ல வேண்டும் என்றால் அந்தமானின் வரைபடத்தை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் போதாது. சமுத்திரத்தினுள் குதிக்காமல் எங்கும் செல்ல முடியாது. இவ்வாறு முழுமைநோக்கு பற்றி அறிவுத்தளத்தில் மட்டும் வாதாடிக் கொண்டு நேரடிக் பயிற்சியில் இறங்காமல் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். ராபின் கார்ன்மேன் என்ற விஸ்கான்ஸின் பல்கலைக்கழகப் பேராசிரியர் எடுத்த பேட்டி ஒன்றில் வில்பர் இவ்வாறு கூறிகிறார் -

"Robin Kornman: And what effect do you hope to have? What can knowing your philosophy do for the advancement of consciousness?

Ken Wilber: Not very much, frankly. Each of us still has to find a genuine contemplative practice-maybe yoga, maybe Zen, maybe Shambhala Training, maybe contemplative prayer, or any number or authentic transformative practices. That is what advances consciousness, not my linguistic chitchat and book junk. But if you want to know how your particular practices fit with the other approachs to truth that are out there, then these books will help you get started. They offer one map of how things fit together, that's all. But none of this will substitute for practice..
...
...
Kornman:Your own world view is complicated enough. Meditators might just say, "Why do I need to have a global-historical view at all? Leave me alone to just meditate." What would you say to them?

Wilber: Just meditate.
....
....
...

Kornman:
But you have some other scenarios as to why things can "go bad" in meditation.


Wilber: Yes, the idea is that, as we were saying, development consists of several different streams that develop through the basic stages or waves of consciousness unfolding. The great wisdom traditions tend to emphasize two or three of these streams, such as the cognitive (awareness), the spiritual (and moral), the higher affect (love and compassion). But they tend to neglect other streams, such as emotional, interpersonal, relationships, and conventional interactions.

Thus, as you tend to make progress in some of these streams-perhaps the meditative/cognitive-you can become a little "unbalanced" in your overall development. Other developmental lines become neglected, withered, atrophied. Your psyche is saddled with one giant and a dozen pygmies. And the more your meditation practice advances, the worse the imbalance becomes. You start to get very weird, and you are told to increase your meditative effort, and pretty soon you come apart at the seams like a cheap suit. Yes?

So one of the things that we might want to look at are ways to bring a more integral practice to bear on our lives, an integral practice that includes the best of ancient wisdom and modern knowledge, and blends the contemplative with the conventional. I don't have the answers here, but these books are, I hope, a way to begin this dialogue in good faith and good will.

Kornman: When you earlier said that meditators could "just meditate," was that being just a little glib? Because it doesn't seem that you really think that meditation alone is enough.

Wilber: Well, you didn't ask if I thought meditation alone is enough. You asked what I would tell somebody who said, "Leave me alone to just meditate." I'd say, "Just meditate." I have no desire to interfere with anybody's practice. But if you asked instead, "What other practices do you think meditators could use to facilitate their growth?" then I would answer more or less as I just did.

In other words, a judicious blend of Eastern contemplative approaches with Western psychodynamic approaches is an interesting and I think healthy way to proceed. And if you want a more comprehensive world view, including both absolute and relative truths, then certainly there are numerous items that the West will bring to the feast. Any of those approaches taken by themselves is demonstrably partial by comparison.

Incidentally, if you're put off by all this you don't have to come. But everybody has an invitation to this dance, I think. It's a real Shambhala Ball. Seriously. Chogyam Trungpa's Shambhala vision, as I understand it, was a secular and integral weaving of the dharma into the vast cultural currents in which it finds itself. A Brief History of Everything outlines many of those currents and suggests one way that the dharma can enrich-and be enriched by-those currents. This is very simple, I think."
*-*-*

முழுமைநோக்கு பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை இப்பகுதியில் பார்த்தோம். முழுமைநோக்கு எவ்வாறு ஒரு தனிமனிதனின் வளர்ச்சிப் பாதையை(Ontogeny), ஒரு குழுவின் வளர்ச்சிப் பாதையை(Phylogeny) விளக்குகிறது என்பதையும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற காலகட்டங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தொடரும்