Thursday, June 26, 2008

பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் - பாகம் 1


“The way up and the way down are one and the same”

- Heraclitus

"இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்தப் பூங்காவில்
ஒன்று
ஊஞ்சலில் நின்றும் உட்கார்ந்தும்
ஒற்றைக் காலைத்தூக்கியும்
வேகமாக வீசி ஆடியும்
ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது
மற்றொன்று
காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக் கொண்டும்
ஓவென்று கத்திக் கொண்டும் இருந்தது
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?"
- முகுந்த் நாகராஜன்

அறுபதுகளின் காலக்கட்டம். அமெரிக்க ஊடகங்கள் அறுபதுகள்(1960s) என்பதை 1963ல் இருந்து 1973வரையிலான காலகட்டத்தயே குறிப்பிடவதாக கூறுகின்றன. வியட்னாம் யுத்தம் குறித்த அதிருப்தி, எதிர்க்கலாச்சார அலைகள் போன்றவை அங்கு மேலோங்கி இருந்த காலக்கட்டம். 1950களின் முடிவில் அடுத்தடுத்து வெளிவந்த ‘பீட் எழுத்தாளர்களின்' புத்தகங்கள்(கின்ஸ்பர்கின் ‘Howl', வில்லியம் பரோஸின் ‘Naked Lunch', ஜாக் கெரோஆக்கின் ‘On the Road' போன்றவை) அறுபதுகளில் அமெரிக்காவில் பெரும் பாதிப்பை செலுத்தி வந்தன. ஹிப்பி(Hippie) அலை மேலோங்கி இருந்ததும் அக்காலகட்டத்திலேயே. கட்டற்ற சுதந்திரம், இயற்கையோடு ஒன்றியிருத்தல், எவ்வித வன்முறைக்கும் எதிராக குரல் கொடுத்தல், எவ்வித இலட்சியவாதத்தோடும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்றவையே ஹிப்பி அலையின் சாரமாக இருந்தது. 'Make love, Not war' என்பது இவர்கள் பிரபலப்படுத்திய ஒரு சொற்றொடர். ஒருவகையில் கிழக்கத்திய நுண் இறைவாதம் (Eastern Mysticism), ஸென் பௌத்தம் போன்றவைகளை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியதும் இவர்களே.

அன்று பல அமெரிக்க இளைஞர்களை ஆட்கொண்ட பெரும்கனவு அது. பல்கலைக்கழகங்களில் இருந்து அலைஅலையாக ஒரு முதுகுப்பையை மட்டும் மாட்டிக் கொண்டு ஓரு இடத்தில் இருந்து மற்றொரு இடமாக அலைந்தார்கள். மெஸ்கலைனும், எல்எஸ்டியும் உட்கொண்டு மராக்கேஷ் எக்ஸ்பிரஸைப்(Marrakesh Express) பிடித்து மொரோக்கோவிற்க்கு சிலர் போனார்கள். கித்தாரில் பாப் திலானயும்(Bob Dylan), பீடில்ஸையும்(The Beatles), டோர்ஸையும்(The Doors) வாசித்துக் கொண்டு சிலர் கோவாவில் உள்ள ஆரம்போலுக்கும், அஞ்ஜுனாவுக்கும் சென்றார்கள்.

அறுபதுகளின் மத்தியில் உச்சத்தில் இருந்த ஹிப்பி அலை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேய்வுர ஆரம்பித்தது. பலர் அதிருப்தியோடு அமெரிக்காவிற்கே திரும்பி வர ஆரம்பித்தார்கள்.

இதன் உச்சமாக ஒரு நிகழ்வு டிசம்பர் மாதம் 1969ஆம் ஆண்டு நடந்தது. ‘வுட்ஸ்டாக் திருவிழா' (Woodstock Festival) என்பது வருடந்தோரும் நியூயார்க்கில் உள்ள பெத்தல்(Bethel) என்னும் இடத்தில் நடக்கும் ஒரு மாபெரும் இசைத் திருவிழா. ஒரு முக்கியமான எதிர்க்கலாச்சார நிகழ்வு அது. ஹிப்பிக்களுக்கு ஒரு மெக்கா போல். நான்கைந்து லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் கூட்டம். பல பிரபல ராக் இசைப் பாடகர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் கூடும் திருவிழா. ஹிப்பிக்களின் 'கட்டற்ற சுதந்திரம்', ‘மனவிரிவு' , ‘உலக அமைதி', 'மானுடம் நோக்கி விரியும் அன்பு' போன்றவற்றுக்கு ஒரு வெளிவடிவம் போல அமைவது அந்த விழாவே. நியூயார்க்கில் நடந்த அந்த விழா மாபெரும் வெற்றியடைய அதே போல் ஒரு விழாவை கலிபோர்னியாவில் உள்ள அல்டாமோண்ட்டில்(Altamont) நடத்த முடிவு செய்தார்கள். 'வுட்ஸ்டாக் வெஸ்ட்' (Woodstock West) என்றும் அல்டாமோண்ட் பிரீ கான்ஸெர்ட் (The Altamont Free Concert) என்றும் அது அழைக்கப்பட்டது. மூன்று லட்சத்திற்க்கும் மேல் பார்வையாளர்கள் குழுமியிருந்தார்கள். மேடையில் ரோலிங் ஸ்டோன்ஸ்(Rolling Stones) பாடிக்கொண்டிருந்த வேளையில் மெரிடித் ஹண்டர் (Meredith Hunter) என்ற ஒரு பார்வையாளர் குத்திக் கொல்லப்பட்டார். கொன்றது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hell's Angels) என்ற ஹிப்பியுகத்தில் போற்றப்பட்ட ஒரு குழுவின் உறுப்பினர். மெரிடித் ஹண்டர் போதை மருந்தின் தாக்கத்தால் தன் சட்டைப்பையில் இருந்த துப்பாக்கியை எடுத்ததால் தான் அந்த ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் உறுப்பினரால் தற்காப்பிற்காக கொல்லப்பட்டார் என்று தெரியவந்தது.

இதை போலேவே தொடர்ந்து சில கொலைகள். வன்முறைகள். இது ஹிப்பிகளின் நடுவே பெரும் அதிர்வை உண்டு பண்ணியது. சுதந்திரம், அமைதி, மனவிரிவு என்று பேசியவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகிறார்களே என்று பல அமெரிக்க ஊடகங்கள் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்தன. மெதுவாக பலர் தங்களை ஹிப்பிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளத் தயங்கினார்கள். போதை மருந்துகளால் ஏற்படும் ‘மனவிரிவு' ('expanding consiousness') போன்றவைகள் மீது அவநம்பிக்கை உருவானது. ஹிப்பியலையும் ஒரு முடிவுக்கு வர ஆரம்பித்தது.

இந்த அறுபதுகளின் இறுதிக்காலக்கட்டம் அமெரிக்கர்களுக்கு ஒரு சோதனைக் காலகட்டமாகவே படுகிறது. முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருந்த ஒரு யுத்தம், கென்னடி, மால்க்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றவர்களின் படிகொலைகள் மற்றும் ஹிப்பி அலையின் தேய்வு போன்றவை தீவிர அவநம்பிக்கையை அவர்களின் மத்தியில் உண்டு பண்ணியது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் அறுபதுகளில் நிகழ்ந்தன. முதல் இருதய மாற்று அறுவைசிகிச்சை, முதல் மினீகம்ப்யூட்டர், BASIC போன்ற நிரழ்மொழி, இணையத்தின் முன்னோடியான ARPANET மற்றும் நிலவில் முதற் காலடி எடுத்து வைத்த அப்போலோ11 குழு போன்ற பல முக்கிய நிகழ்வுகள். இதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்காற்றின. எழுபதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் ஹிப்பி மற்றும் எதிர்கலாச்சார அலைகள் கொஞ்சம் ஓய்ந்து புறவய உண்மையை அறிவியல் பார்வை மீண்டும் ஓங்கி எழுந்தது. இதற்கு எதிர் திசையில் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

*-*-*

எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருபத்தி இரண்டு வயதுப் பையன் ஒருவன் ஈடுபட்டிருந்தான். அதன் முன்பு டியூக் பல்கலைக்கழத்தில் மருத்துவ முன்படிப்பு(Pre-Med) படித்துக் கொண்டிருந்த அவன், மருத்துவப் படிப்பில் காணப்பட்ட தீவிர ஒழுங்கு மற்றும் புறவயப் பார்வையால் அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறி நெப்ராஸ்க்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தான். மருத்துவப் படிப்பு தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றதாக இல்லாத்தாலும், தன் கற்பனைத்திறனையே மழுங்கடித்துவிடுகிறது என்று அவன் உணர்ந்ததாலும் அவன் பயோகெமிஸ்ட்ரியில் சேர்ந்தான். அதிலாவது தன் கற்பனையை உபயோகித்து சில செய்முறை ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்த அவனை அவனது பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் உள்ள தவளைகளை எல்லாம் பிடித்து அதன் கண்களை நோண்டி எடுத்து சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். இவ்வகை ஆய்வுகளையே தொடர்ந்து ஒரு வருடமாக செய்த அவன் ஒரு நாள் ஆய்வுக்கூடத்துக்குப் போவதையே நிறுத்தினான். புறவயமான ஆய்வுமுறைகளில் உள்ள போதாமைகளை அவன் உணர்ந்தான். அதை மட்டுமே நம்பி எழுதப்பட்ட ஆய்வறிக்கைகளின் முழுமையின்மை அவனை வெகுவாக பாதித்தது. அதே சமயம் இதன் எதிர் திசை என்று அப்போது நம்பப்பட்ட ஹிப்பி அலையும் அவனை ஈர்க்கவில்லை. அதன் போதாமைகளையும் அவன் உணராமல் இல்லை.

இவ்விரு திசைகளிலும் நுழைய விடாமல் தடுத்தது அவனது உள்மனம். பல மாதங்கள் தனது விடுதியறையிலேயே அடைந்து கிடந்தான். பிறகு தீடீரென்று வெறித்தனமாக பல துறைச் சார்ந்த நூல்களை வாசிக்க ஆரம்பித்தான். அப்பொழுது பாஸ்டனில் புதிதாக துவங்கப்பட்ட ‘Shambala' என்ற பதிப்பகம் பல கிழக்கத்திய நுண் இறைவாதம் மற்றும் கிழக்கத்திய தத்துவம் சார்ந்த நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தது. நெப்ராஸ்க்காவில் தன் விடுதியறையில் இருந்து பல நூறு புத்தகங்களை ஒவ்வொரு மாதமும் தபாலில் ஆர்டர் செய்துக் கொண்டிருந்தான். 'Shambala' அப்பொழுது ஒரு சிறிய பதிப்பகம். அந்த பதிப்பகத்தை தொடங்கிய சாம் பெர்ச்சோல்ஸ்(Sam Bercholz) ஆர்டர் எடுப்பதில் இருந்து புத்தகங்களைக் கட்டித் தபாலில் அனுப்புவது வரை அனைத்து வேளைகளையும் செய்து கொண்டிருந்தார். 'யார் இந்தப் பையன்? இத்தனை புத்தகங்களையும் இவன் படிக்கிறானா? இல்லை சும்மா வாங்கி வாங்கி விற்கிறானா? இத்தனையையும் இவன் படிக்கிறான் என்றால் இவனிடம் இருந்து ஏதோ ஒருநாள் நமக்கு ஒரு செய்தி வரும்' என்று நினைத்தார்.

இப்படி ஒரு வெறித்தமான வாசிப்பில் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் மூழ்கியிருந்தான். Tao Te Ching போன்றவை அவனை மிகவும் ஈர்த்தது. பௌத்தமுறை தியானத்திலும் ஈடுபட்டிருந்தான்.

தனது பயோகெமிஸ்ட்ரீ முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு குறித்து பேசும் நாள் நெருங்கியது. துறையின் அனைத்து பேராசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்தார்கள். "Photoisomerization of Rhodopsin in Bovine Rod outer segments" என்பது அவனது ஆராய்ச்சித் தலைப்பு. மேடையேறிய அவன் அவைக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தான். ஆராய்ச்சித் தலைப்பு குறித்து பேசும் முன் தனக்கு பிடித்தமான இன்னொரு தலைப்பு குறித்து சிலநேரம் பேச அனுமதி கோரினான்.

'உண்மை நிலை மற்றும் யதார்த்தம் என்றால் என்ன? அதை நாம் அறிவது எப்படி?' (What is Reality? And how do we know it?') என்பதே அந்த தலைப்பு. மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவம், உளவியல், அறிவியல், நுண் இறைவாதம், மீபொருண்மைவாதம் என்ற பல்வேறு வழிகளின் ஊடாக ‘தூய உண்மை நிலை' என்றால் என்ன என்பதையும் அதை நாம் அறிய நமக்குள்ள சிக்கல்கள் என்ன என்பதையும் அதை மீறி செல்ல நமக்குள்ள பல்வேறு வழிமுறைகள் என்ன என்பதையும் பற்றி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விளக்கினான். அவன் விளக்கி முடித்த பின் அனைவரின் முகத்திலும் ஒருவித பிரம்மிப்பு கலந்த மிரள்ச்சியே சில வினாடிகள் நீடித்தது. பிறகு பின் கடைசி வரிசையில் இருந்து ஒரு குரல், "பிரமாதம்! பிரமாதம்! நாம் இப்பொழுது மீண்டும் 'நம்' யதார்த்தத்துக்குச் செல்வோமா? (‘Ah! Wow. Ok Now, Back to reality!')" என்றது. செமினார் அறை சிரிப்பலைகளால் அதிர்ந்தது. அந்தப் பையனாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு தனது விடுதியறையில் இந்நிகழ்ச்சிப் பற்றி அவன் யோசித்தான். தான் எவ்வளவு தான் சிந்தித்து கடுமையாக உழைத்து இத்தகைய உள்விரிவுள்ள தலைப்புகள் குறித்து பேசினாலும் இதற்கு இவ்வகை வரவேற்பே பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் இருக்கும் என்று உணர்ந்தான். தனது பேராசிரியரிடம் தான் முனைவர் பட்டப்படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினான். 'பிறகு என்ன பண்ணப் போகிறாய்', என்று பேராசிரியர் கேட்டார். ‘Consiousness' தொடர்பாக ஒரு புத்தகம் எழுதப் போகிறேன் என்றான் அவன். ‘நீ ஒரு ஹிப்பியாகப் போகப்போகிறாய் என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டு உன்னை வாழ்த்தி விடையனுப்பி இருப்பேனே!' என்பது போல் செய்வதரியாமல் பரிதாபமாக ஒரிருநிமிடம் அவனைப் பார்த்தார் அந்த பேராசிரியர்.

*-*-*

பல்கலைகழகத்திலிருந்து வெளியேறி பின் அந்தப் பையன் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் தட்டுகளைக் கழுவுபவனாக(Dishwasher) வேலையில் சேர்ந்தான். பகல் வேலைகளைப் படிப்பிலும் மாலை வேலைகளை உணவகத்திலும் அவன் கழித்தான். அடுத்த பத்து வருடங்களும் அப்படியே. மாதம் உணவுடன் முன்னூறு டாலர்களை அந்த உணவகம் அவனுக்குத் அளித்தது. அதில இருநூறை புத்தகங்களில் கழித்தான்.

1973ஆம் ஆண்டு தனது 23ஆம் வயதில் ‘The Spectrum of Consiousness' என்ற ஒரு புத்தகத்தை எழுதி முடித்தான். இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்களால் அது நிராகரிக்கப்பட்டது. கடைசியில் 1977ஆம் ஆண்டு அந்த புத்தகம் பதிப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில் அது ஒரு சிறிய அதிர்வை உண்டு பண்ணியது. ஹஸ்டன் ஸ்மித்(Huston Smith) போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற பலரால் அப்புத்தகம் பாராட்டப்பட்டது. இருந்தும் கூட பல்கலைக்கழகங்கள் சார்ந்த அமைப்புகளும் (Academia) எதிர்கலாச்சாரச் சந்ததியினரும்(Dominant Counterculture) அப்புத்தகத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. அதைப் பற்றியெல்லாம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் அவன் தொடர்ந்து படித்துக் கொண்டும் எழுகிக் கொண்டும் இருந்தான். தட்டுக் கழுவிக் கொண்டே அடுத்தடுத்து ஆறு புத்தகங்களை எழுதினான். அவற்றில் சில 'Shambala' பதிப்பகத்தாலேயே வெளியிடப்பட்டது.

*-*-*

அந்த முதல் புத்தகத்தில் ஆரம்பித்து தொடர்ந்து கடந்த இருபத்தைந்தாண்டுகளாக தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பற்றி இன்னமும் பிரபல ஊடகங்களுக்கும், பெரும்பாலான பேராசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக்கழகங்களைச் சுற்றி உள்ள அமைப்புகளுக்கும், எதிர்கலாச்சாரச் சந்ததியினருக்கும் தெரியாது என்பதே உண்மை. ''the most important living philosopher you've never heard of" என்று Salon.com கூறும் அந்தப் பையனின் பெயர் கென் வில்பர் (Ken Wilber).



இந்த அளவுக்கு கென் வில்பர் உதாசீனப்படுத்தப்பட்டது/படுவது ஏன்? அப்படி என்ன தவறு செய்தார்?

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் மேலோங்கி இருக்கும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துடனும் (Deconstructive Postmodernism) அதன் மறுமுனையாக இருந்த எதிர்க்கலாச்சாரக் கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடனும்(Romantic Ecoprimitivism) தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள மறுத்தார் என்பதே அந்தத் தவறாகும். பல்கலைக்கழகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டால் புறவய முறை மற்றும் தகர்ப்பமைப்புப் பின்நவீனத்துவத்துவம் போன்றவற்றோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருடந்தோறும் புறவய நோக்கில் மட்டுமே எழுதப்படும் ஆய்வரிக்கைகளைப் பதிப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். ‘பதிப்பி அல்லது செத்து மறி' (Publish or Perish) என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள பல்கலைக்கழக அமைப்புகள் அவரை எவ்வகையிலும் ஈர்க்கவில்லை. இதில் இருந்து வெளியேறுபவர்களில் பெரும்பாலானோர் இதன் மறுதிசையாக இருந்த எதிர்கலாச்சார கற்பனைவாதம் சார்ந்த பின்னேற்றத்துடன்(Romantic Ecoprimitivism) தங்களை இணைத்துக் கொள்வார்கள். இது புறவய நோக்குக்கு மட்டும் அல்லாமல் அறிவுத்துறைக்கே எதிராக இருந்ததாலும் மனம், சுயம் உட்பட எல்லாவற்றையும் உடல், இயற்கை என்று சுருக்குவதாலும் இதனிலும் அவரால் தன்னை இணைத்துக் கொள்ள முடியவில்லை. . இவ்விரு வழிமுறைகளும் முழுமையானவை இல்லை.
இவைகள் எதையும் இரண்டாகப் பிரித்து பிரித்து ஆராயும் இருபொருள்வாத நோக்கு கொண்டவை என்றார்.

எல்லா துறைகளும் பாதைகளும் சில முக்கியமான உண்மைகளை நமக்குத் தருகின்றன. இவ்வித இருபொருள்வாத நோக்கு ஒன்றை முழுவதுமாக ஒடுக்கி மற்றோன்றை மீட்க முயல்கிறது . இவ்வாறு பல்வேறு அறிவுத்துறைகள் பிளவுபட்ட உண்மைகளையே நமக்கு அளிக்கின்றன என்றார்.

ஒரு அறிவுத்துறை எப்படி இயங்குகிறது, அது எத்தனை ஒற்றைப்படையாக உலகத்தைப் பார்க்கிறது, எப்படி அது எதிர்மறைக் கருத்துக்களைச் சுருக்குகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றறைப் பற்றி ஆழமாக எழுதினார். ஃபிராய்ட் எந்த இடத்தில் நமக்கு உதவுகிறார், பியாஜேவின்(Piaget) முக்கியத்துவம் என்ன, கெப்ஸரும் (Gebser) ஹெபர்மாஸும்(Habermas) கூறுவது என்ன, புத்தரும், ரமணரும் இதில் எப்படி எவ்வித முரண்பாடும் இல்லாமல் பொருந்துகிறார்கள் என்பதை விளக்கினார்.


கென் வில்பரின் மிக ஆதாரமான நோக்கு ஒன்று உண்டு என்றால் அது ‘எல்லாரும் சரியே' (Everybody is right) என்பதே ஆகும். இந்த நோக்கை, இந்த முறையையே முழுமைநோக்கு(Integral) என்கிறார். எந்தத் தரப்பையும் நிராகரிகாமல் அனைத்தையும் அரவனைத்து மேலெழும் ஒருவகை நோக்கே முழுமை நோக்காகும்(Integral View). இது பின்நவீனத்துவம் கூறும் பன்மைசார் ஒப்புநோக்குவாதம் ('Pluralistic Relativism') போல் தோன்றினாலும் இதற்கும் முழுமைநோக்கும்(Integral) பல முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

பன்மைசார் ஒப்புநோக்குவாதம் உலகமனைத்துக்கும் பொதுவான உண்மை என்ற ஒன்று கிடையாது என்கிறது. (There are no universal truths). முழுமைநோக்கு(Integral) சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளை ஏற்கிறது. அவைகளை மேற்பரப்பில் தெரியும் தோற்றம் என்கிறது (Sociocultural Surface Structures). மேற்பரப்பில் தெரியும் தோற்றத்தைத்தோடு அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவான, மாறாத பண்புகளும் (Universal Deep structures) உள்ளன என்கிறது முழுமைநோக்குப் பார்வை(Integral View). உளவியல், சமூகவியல், அறிவியல், தத்துவம், அறவியல், மீபொருண்மைவாதம், ஆன்மீகம் என்று பல தளங்களில் இவற்றைப் பற்றி விவாதித்து மானுடம் அனைத்துக்கும் பொதுவான அன்பு, கனிவு,அறவுணர்வு பற்றி விரிவாக பேசுகிறது.

ஒரு சில தளங்களோடு மட்டும் தங்களை அடையாளப்படுத்திப் பார்த்து திருப்த்தியடைந்து கொண்டவர்களுக்கு இவ்வகை முழுமைநோக்கு பெரும் நகைப்புக்குறியதாகவே தோன்றியது. ஃப்ராய்ட்டியம், வலுவான தன்முனைப்பு (Ego) தான் ஒருவரின் சுயத்தின் (self) ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறது. புத்தரும், ரமணரும் தன்முனைப்பும், தன்னுனர்வும் தான் ஒருவனின் சுயத்தை அறிய பெரும் தடைகற்களாக இருக்கின்றன என்கிறார்கள். எப்படி இவைகள் பொருந்தும்? நேர் எதிர் பாதைகள் அல்லவா இவை? என்று கேட்டார்கள். வில்பரின் கனவு ஒரு முதிரா மனதின் விபரீத முயற்சி என்றார்கள்.


இதற்கான பதில்களை வில்பர் விரிவாகவே தனது புத்தகங்களில் பதிவு செய்துள்ளார். சுருக்கமாக இப்படி சொல்லலாம். ஃப்ராய்டும், பியாஜேவும், புத்தரும், ரமணரும் மனம் என்ற ஒன்றைப் பற்றி பொத்தாம்பொதுவாக பேசவில்லை. நம் மன அமைப்பின் உள்ள வெவ்வேறு அடுக்குகளில் நின்றே மனதைப் பற்றி பேசுகிறார்கள். ஃப்ராய்டும், பியாஜேவும், எரிக்ஸனும் பிறப்பில் இருந்து இறப்பு வரை சுயம் எப்படி படிப்படியாக வளர்கிறது, எப்படிஎப்படியெல்லாம் அது உருமாறி முன்னேறுகிறது, அவ்வழியில் எவ்வகை நோய்க்கூறுகளை, மனக்கோளாறுகளை, சிக்கல்களை எதிர்கொள்கிறது, அந்த சிக்கல்களில் சிக்குண்டு எவ்வாறு அது தத்தளிக்கிறது, அதில் இருந்து மீழ்வதற்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றைப் பற்றியே பேசுகிறார்கள். அதாவது Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான தன்முனைப்பின், சுயத்தின், ஆளுமையின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் பற்றியே அவர்கள் பெரும்பாலும் பேசுகிறார்கள். ரமணரும் புத்தரும் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலை நோக்கி நகர விழையும் சுயத்தின் நகர்வைக் குறித்தே பேசுகிறார்கள். அதாவது தன்முனைப்போடு (Ego) சுயம்/ஆளுமை (Self / Personality) கொள்ளும் குறுகிய அடையாளம் அகன்று விரிவாகிச்செல்லும் பாதையைப் பற்றியே இவர்கள்பேசுகிறார்கள்.

Pre-Personal நிலையில் இருந்து Personal நிலைவரையிலான வளர்ச்சிக்கு தன்முனைப்பின் பங்கு இன்றியமையாதது. தனித்துவம் மிக்க ஒரு ஆளுமைக்கு வலுவான தன்முனைப்பு தேவையான ஒன்றே. இங்கு ஃப்ராய்டும், பியாஜேவும் மற்ற பல உளவியல் அறிஞர்களும், அவர்களின் பலவகைக் கொள்கைகளும்(theories) முக்கியமானவை. அதே போல் Personal நிலையில் இருந்து Trans-Personal நிலைநோக்கி நகர தன்முனைப்பின் இறுக்கம், சுயம் தன்முனைப்போடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்துதிக் கொள்ளுதல் போன்றவைகள் தளருவதும் அவசியமே. இங்கு ரமணரும், புத்தரும் கூறியவை முக்கியமானவை.

இதுபோல் ஒவ்வொறு துறைகளிலும் பல்வேறு சிக்கல்களை, சேரவே சேராது என்று இருக்கும் பலவித பாதைகளை வில்பர் இனம்கண்டார். இதன் பொதுகூறுகளைக் கொண்டு இவற்றை இருவகையில் பிரித்தார் - மேற்நோக்கும் பாதை(Ascent) மற்றும் கீழ்நோக்கும் பாதை (Descent). கீழ்நோக்கு என்பதால் அப்பாதை ஒன்றும் இழிவானது இல்லை. இவ்விரு பாதைகளும் ஒரே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையே.

விசையைத் தகர்த்து, விண்ணில் பறந்து, காற்றைக் கிழித்து, காற்றையே உண்டு காற்றோடு காற்றாக கலப்பது ஒருவகை. மண்ணில் பிறந்து மண்ணில் அலைந்து மண்ணிலேயே மகத்துவத்தைக் காணுவது மற்றொரு வகை. முரண்பாடே இல்லாமல் இவ்விரண்டும் இணையும் பாதையே வளர்ச்சிக்கான சிறந்த பாதை என்கிறார்.

மேற்நோக்கு மற்றும் கீழ்நோக்கு என்பதை பல இடங்களில் பலவாறு விவரிக்கப்பட்டுள்ளன. அப்போலோ- தியோனாஸிஸ் (Apollo,Dionysus), அலேப்- ஜகீர்(Alaeph,Zahir), சிவன்-சக்தி, சம்சாரா-நிர்வாணா, பிரஜ்னா-கருணா (Prajna-Karuna), யின்-யாங் (Yin-Yang) என்று பல்வேறு பெயர்களில்.

யின்னும்-யாங்க்கும் முரணில்லாமல் சேரும் நிலையே தாவோ (Tao). பிச்சமூர்த்தியும், நாஞ்சில் நாடனும் ஒருசேரும் புள்ளி போல்.

- தொடரும்

12 comments:

said...

If you are going ahead with his views till date it is fine.I know that it is difficult to write about Wilber and his ideas in Tamil. The Spectrum of Consciousness is a challenging
book.When I read it i found it
pretty exciting. Frankly speaking it is difficult to keep
up to date with his works unless
one is a keen follower of his writings.After reading Spectrum and
the next 2/3 books I did not read
his subsequent works.Some years
ago I caught up with his works
by reading a book that summarised
his work and ideas over the years.
Writing about Wilber in Tamil is important as he is almost unknown here. I have cited his interview with Capra in my article in Tamil published in 1991.But unless the readers are familiar with atleast some of the theories/philosophies he cites and critiques they will find it difficult to understand him.This is all the more true for Tamil readers.
Good luck.

said...

Ravi,

I have been keeping up with Wilber's current works and the evolution of his theories from what was called as Wilber I, Wilber II.. Wilber V i.e. Return-to-Paradise, Growth-to-Goodness model etc. The series is aimed to introduce his works in whatever small way it can.

Thanks for reading.

said...

enjoyed it

said...

நன்றி அலெகஸ்..

Anonymous said...

இது விமர்சனமல்ல, எனது தெளிவு ..மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகையால் அதிலேயே ஒரு கேள்வி. புத்தி,ஞானம்,அறிவு என்றால் என்ன வித்தியாசம்.

said...

அனானி,

புத்தி, ஞானம், அறிவு என்று நான் எங்கும் பிரிக்கவில்லையே? போன பதிவில் மூளை-மனம் இருபொருள்வாதம் குறித்தும் மனதிற்கும், மூளைக்கும் உள்ள
Correlations குறித்து எழுதியுள்ளேன். மூளை என்பது exterior dimension. மனம் என்பது அதன் interior dimension. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு ஏற்ப மூளையில் உள்ள நீயுரான்கள் சிதறலாம். அதே போல் மூளையில் ஏற்படும் தீடீர் ரசாயண மாற்றங்களுக்கு ஏற்ப மனதின் ஓட்டமும் மாறலாம். இதையே correlation என்று குறிப்பிட்டுள்ளேன். நியுரோ நிபுணர்கள் இந்த 'மூளை-மனம்' குறித்த இருபொருள்வாதத்தை (Mind-Brain dualism) அகற்றுகிறேன்
பேர்வழி என்று மனதை மூளையாக சுருக்கினார்கள்.

இப்பொழுது உங்கள் கேள்விக்கு. ஒரு வசதிக்காக இப்படி வரையருக்கலாம் - புத்தி, அறிவு என்பதை ‘knowledge' என்றும் ஞானம் என்பதை ‘wisdom' என்றும் வரையருக்கலாம். ஒரு வகைப்படுத்துதலுக்கு வேண்டுமென்றால் இப்படி செய்யலாம். மற்றபடி இவை கூறப்படும் இடத்திற்கு ஏற்ப மாறூபடும். நாராயண குரு ‘அறிவு' என்பதை Gnosis என்ற அர்த்ததிலேயே பார்க்கிறார். அவரது ‘அறிவு' என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் ‘Epistemology of Gnosis' என்றே மொழிபெயர்க்kaக்ப்பட்டுள்ளது. அதே போல் பௌதத்தில் ‘wisdom' என்பதை ‘பிரஜ்னா' என்றும் 'compassion' என்பதை ‘கருணா' என்றும் கூறுகிறார்கள். அறிவு என்பது இவை இரண்டும் முரணில்லாமல் சேர்வதே என்றும் கூறுகிறார்கள்.

said...

"மூளை என்பது exterior dimension. மனம் என்பது அதன் interior dimension."
Good explanation.

Please keep writing.

Thanks to http://jeyamohan.in for introduce your article.

Regards
Murugan Subbarayan
Mumbai

said...

Cognitive sciences try to tackle this brain-mind issue in a different way.Reductionism is
necessary at some point.
Jiddu Krishnamurti at places
implies that consciouness is
in brain.i may be wrong.
But I remember to have come across such views in his dialogs of 70s.
Let me respond to you at length once you finish this series.
My problem with Ken Wilber is
he tries to synthesise too much.
I would prefer the incompatibility
among systems of thought to remain.
Moreover wholism and wholistic knowledge does not appeal
much to me. As long as the shortcomings of reductionism
are addressed and accepted thats
fine with me. In fact reductionism
has facilitated growth in knowledge
and provided us with knowledge that
is highly useful. Models, maps and
metaphors are fine but I am somehow
skeptical of grand syntheses.

said...

Ravi,

Reductionism has its uses. I completely agree upon that. Myers-Briggs types etc. are infact some of the profound results of reductionism. But, I do not agree on the 'incompatability' part. also, there are quiet a lot of subtle differences between 'wholistic view' and 'integral view'. i have covered about all this in th second part of the series.

Anonymous said...

Baraka!
I am meerabharathy,
just read two of your articles...
i don't know where are u?
in india? canada?
until recent time...
ijust read only Osho...
then power of Now and earth by Eckhart Tolle
however, last eight year...
i mostly concentred in only meditation...not much readings...
your articles are fabulous....
i need your permission to publish your article in my website..
awakeningawareness.org..
if u r in canada, i love to meet you...
hope! u meditate atleast one in a while...
because my understanding is ...
without meditation...
our writtings are not worth it..
no value..
hope u will understand.
thanks
meerabharathy

said...

Hi Meerabharathi,

You are free to do so. however, i am not in canada. you could mail me at themonkeymeditatesATgmailDOTcom

said...

நண்பர் ஒருவர் சுட்டி தர, பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இதைப் படிக்கிறேன். எவ்வளவு முக்கியமான கட்டுரை இது. நன்றி